நாட்டின் 19 % கொய்மலர் உற்பத்தி தமிழகத்தில் நடைபெறுகிறது

நாட்டின் 19 சதவீத கொய்மலர் உற்பத்தி தமிழகத்திலிருந்து நடைபெறுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டார்.
உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 122-ஆவது மலர்க்காட்சியின் நிறைவு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 122-ஆவது மலர்க்காட்சியின் நிறைவு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

நாட்டின் 19 சதவீத கொய்மலர் உற்பத்தி தமிழகத்திலிருந்து நடைபெறுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டார்.
உதகையின் மிகப் பெரிய மலர்த் திருவிழாவான 122-ஆவது மலர்க் காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18-ஆம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற மலர்க் காட்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்று ஆளுநர் புரோஹித் பேசியதாவது:
கொய்மலர் சாகுபடிக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் தளி பகுதியில் கொய்மலர் சாகுபடி-ஆராய்ச்சி மையம் ரூ. 8.8 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இம் மையத்தின் மூலம் கொய்மலர் சாகுபடியில் மேலும் புதிய உத்திகளைக் கையாளவும், போதிய அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 
நாட்டின் மொத்த மலர் உற்பத்தியில் தமிழகத்திலிருந்து 19 சதவீத மலர்கள் உற்பத்தி செய்யப்படுவது பெருமைக்குரியதாகும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, ஆளுநரின் முதன்மைச் செயலர் ராஜகோபால், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தோட்டக் கலைத் துறை இயக்குநர் என்.சுப்பையன் வரவேற்றார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நன்றி கூறினார். மலர்க் காட்சி நிறைவு விழாவையொட்டி பழங்குடி மக்களான தோடர், குரும்பர், இருளர் கோத்தர் உள்ளிட்டோரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

விழாவில் தமிழக ஆளுநரின் சுழற்கோப்பையான கார்டன் ஆஃப் தி இயர் கோப்பை வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி கமாண்டன்டுக்கு வழங்கப்பட்டது. முதல்வரின் சுழற்கோப்பையான புளூம் ஆஃப் தி இயர் கோப்பை உதகையிலுள்ள காஸ்மிக் கதிர்கள் ஆய்வகத்துக்கு வழங்கப்பட்டது. 
தனியார் பூங்காக்களுக்கான போட்டிகளில், வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் சுழற்கோப்பை எல்சம்மா தாமசுக்கும், மிலேனியம் வில்லா சுழற்கோப்பை எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கும், மாதா கவுடர் சுழற்கோப்பை ஹோட்டல் ஜெம் பார்க் வீரமணிக்கும், சந்திரமணி கிருஷ்ணப்பா சுழற்கோப்பை ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துக்கும், பிரீத்தி கிளாசிக் டவர் கோப்பை குட்ஷெப்பர்டு சர்வதேசப் பள்ளிக்கும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com