போலீஸ் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடும் போலீஸார்.
தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடும் போலீஸார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்த உரிமம் கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு காலாவதியானது. அதன்பிறகு உரிமம் புதுப்பிக்கப்படாததால், ஆலை செயல்படவில்லை. இருப்பினும் ஆங்காங்கே தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்டக் குழுவினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

100-ஆவது நாள்:

இதற்கிடையே, குமரெட்டியாபுரம் போராட்டத்தின்100ஆவது நாளையொட்டி செவ்வாய்க்கிழமை (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் அறிவித்தனர். இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை தூத்துக்குடி தென்பாகம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் முன்பு திரண்டனர். அங்கிருந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். அவர்களுடன் தூத்துக்குடி மாநகரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர்.

போலீஸார் தடியடி: தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் பேரணி வந்தபோது, திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சி சராட்கர் தலைமையிலான போலீஸார், பேரணியாக வந்தவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஆனால், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், போலீஸார் அமைத்திருந்த தடுப்புவேலியை தகர்த்துவிட்டு செல்ல முயன்றனர்.

இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி பொதுமக்களை அங்கிருந்து கலைத்தனர். சிறிது தூரம் பின்னோக்கிச் சென்ற பொதுமக்கள் பின்னர் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இதனால் போலீஸார் பின்வாங்கினர். இதையடுத்து, போலீஸார் அமைத்திருந்த அனைத்து தடுப்புகளையும் தகர்த்தெறிந்த பொதுமக்கள், ஆட்சியர்அலுவலகம் நோக்கி முழக்கங்களை எழுப்பியபடி முன்னேறினர். இதற்கிடையே, மடத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர், பேரணியாகச் சென்றவர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பினர்.

கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு: பேரணி, இந்திய உணவுக் கழக கிட்டங்கி முன்பு வந்தபோது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், குறைவான போலீஸாரே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால், போலீஸாரின் தடுப்புகளை அகற்றிவிட்டு பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். ஆயிரக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கியதைத் தொடர்ந்து போலீஸார், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். 27 முறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியபோதும், கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்தனர்.

தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடும் போலீஸார்.

துப்பாக்கிச் சூடு: பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர். மேலும், 10-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், ஆட்சியர் அலுவலக கதவு மற்றும் ஜன்னல்கள் மீது கற்களை வீசினர். இதனால் கதவுகளில் இருந்த கண்ணாடி உடைந்து சிதறியது. இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 15-க்கும் மேற்பட்டோர் மீது குண்டு பாய்ந்தது.

இதில், தூத்துக்குடி புஷ்பாநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (22), தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த கிளாஸ்டன் (40), ஆசிரியர்காலனி பகுதியைச் சேர்ந்த கந்தையா (55), தூத்துக்குடி குறுக்குச்சாலையைச் சேர்ந்த தமிழரசன் (45), மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த சண்முகம் (40), தாளமுத்துநகரைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜ் (45), தாமோதரன் நகரைச் சேர்ந்த மணிராஜ் (34), சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்னோலின் வெனிஸ்டா (17), தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கார்த்திக் (22) ஆகிய 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

75-க்கும் மேற்பட்டோர் காயம்:

த்தோலிக்க கிறிஸ்தவ ஆலய பங்குத்தந்தை ஜெயசீலன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயமடைந்த இரண்டு பெண் காவலர் உள்பட 15 காவலர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீண்டும் துப்பாக்கிச் சூடு...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்துக்கு பிற்பகல் 3 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அவருடைய வாகனத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் சேவியர் மனைவி வினித்தா (37) உயிரிழந்தார். மற்றொரு பெண் காயமடைந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com