ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தடை: தமிழக அரசு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதையேற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:}ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில், கடந்த 2013}ஆம் ஆண்டு தொழிற்சாலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வல்லுநர் குழு ஆய்வு செய்து, ஆலையை இயக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
நிபந்தனைகள் பூர்த்தி செய்யவில்லை: இதனிடையே, ஸ்டெர்லைட் உருக்காலை முதல் அலகின் உரிமத்தைப் புதுப்பிக்க அந்த ஆலை சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு செய்யப்பட்டது. ஆலை நிர்வாகம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பது தெரியவந்தது.
தொழிற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. உப்பார் ஆற்றங்கரை மற்றும் தனியார் நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர உருக்குக் கழிவுகளை அகற்றுவதற்கும், உருக்குக் கழிவுகள் உப்பாற்றில் கலப்பதைத் தடுப்பதற்கு தடுப்புச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜிப்சம் கழிவுகளை சேகரிப்பதற்கான குளங்கள் உரிய முறையில் அமைக்கப்படவில்லை போன்ற காரணிகளால் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலையை இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாரியத்தின் உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு ஆணையத்தில் ஆலை நிர்வாகம் மனு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இயங்காமல் இருக்கத் தடை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கடந்த 2013}இல் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டதைப் போன்று, இப்போதும் ஆலையை இயங்காமல் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு மற்றும் சில அமைப்புகள் சார்பில், ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன.
ஊர்வலமாகச் சென்ற போது, கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறை வாகனங்களைத் தீயிட்டும், ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், ஆட்சியர் அலுவலகத்தை கல்வீசியும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com