தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டதா? தவிர்க்க இயலாத கேள்விகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, போராட்டக்காரர்களை அடக்க வேறு வழியின்றி மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், அதில் ஏராளமான கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டதா? தவிர்க்க இயலாத கேள்விகள்


தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, போராட்டக்காரர்களை அடக்க வேறு வழியின்றி மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், அதில் ஏராளமான கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதே ஏராளமான சந்தேகங்களை எழுப்புகிறது.

அதுவும், இந்த நான்கு பேரும், தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு துளைத்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

  • ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழரசன்
  • மாதா கோயிலில் நடந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த ஸ்னோலின்
  • தாமோதர் நகர் போராட்டத்தை ஒருங்கிணைத்த மணிராஜ்
  • மேட்டுப்பட்டியில் நடந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த கிளாட்சன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து கூறியிருக்கும் தகவலில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், தமிழரசன் மற்றும் ஸ்னோலின் ஆகியோருக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. இவர்கள் எங்கோ அவர்கள் எங்கோ இருந்தனர். அப்போது, ஒலிப்பெருக்கி மூலமாக, இவர்கள் பெயர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழையும் போது அங்கு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தான் எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது என்கிறார்கள்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க காவல்துறை அதிகாரிகளோ, வருவாய்த் துறை அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆனால், இந்த விளக்கங்களை ஏற்கும் மனநிலையில் கிராம மக்கள் இல்லை. அவர்கள் இந்த விஷயத்தை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது, இந்த துப்பாக்கிச் சூடு ஏதோ வன்முறையைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட எதிர்பாராத சம்பவம் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, தலைவர்கள் இல்லாமல் ஆக்குவதே முதல் குறி என்றுதான் மக்கள் கருதுகிறார்கள். தலைவர்களை சுட்டு வீழ்த்துவதன் மூலம், அடுத்த நிலையில் இருப்போருக்கும் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள அச்சம் ஏற்படும். அதோடு போராட்டம் முடிவுக்கு வரும் என்பதே இந்த திட்டமிட்ட செயலுக்குக் காரணம் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள். 

இந்த சந்தேகக் கேள்வியை மெய்ப்பிக்கும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களின் வன்முறைச் செயலைக் கட்டுப்படுத்த, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றால், இங்கு பணியில் இருந்த காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடாமல், குறிபார்த்து சுடுவதில் வல்லவர்களான காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டது ஏன்? அப்படி குறிபார்த்து சுடுபவர்களுக்கு இலக்குகளாக கொடுக்கப்பட்டது என்ன?  இந்த கேள்வியே முந்தைய கேள்விக்கு பதிலாகவும் அமைந்து விடுகிறது.

இந்த கிராம மக்களை ஒருங்கிணைக்க நிச்சயம் ஒரு தலைமை தேவையா என்பதே மிகப்பெரிய கேள்விதான்.

இதுமட்டுமில்லாமல், போராட்டத்தில் கொல்லப்பட்ட ஸ்னோலினின் உதவியாளராக செயல்பட்ட ஒரு இளைஞர் மிக முக்கியத்  தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது, வெகு தூரத்தில் இருக்கும் இலக்கையும் குறிபார்த்து சுடும் வகையிலான 7.2 மி.மீ. துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் கிராம மக்கள் நுழைந்ததும் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் மற்றும் சில காவலர்களும், போராட்டத்தை வன்முறையாக்கும் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்கிறார்.

இது குறித்து விளக்கம் பெற எக்ஸ்பிரஸ் சார்பில் பல முறை காவல்துறை உதவி கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள முயன்றும் அது முடியவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியவர் அந்தோணிசாமி. இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. மருத்துவமனைக்குச் செல்வதற்கு பதில் இவர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுகிறார். 

இவர் தங்களது போராட்டம் குறித்து கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டில் புற்றுநோய் வந்து பாதிக்கப்பட்ட அல்லது உறவுகளை இழந்தவர்களே பெரும்பாலானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது உயிரைக் காக்க மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என்கிறார் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்.

மஹுபா, ஸ்டெர்லைட் ஆலையால் மூச்சுத் திணறல் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர். ஸ்டெர்லைட் காரணமாக இங்கு வசிப்போருக்கு மூச்சுத் திணறல் அல்லது புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. எங்களது பல உறவினர்களை நாங்கள் இழந்துவிட்டோம் என்கிறார் கண்ணீரோடு.

எங்கள் தலைவர்களை பலி கொடுத்தாலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எங்கள் போராட்டம் நீடிக்கும் என்கிறார் மற்றொரு போராளி.

கண்ணீர் விடும் வேதாந்தா நிர்வாகம்: தூத்துக்குடி சம்பவம் குறித்து வேதாந்தா குழுமும் வருத்தமும், கவலையும் வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் நடந்த சம்பவம் மிகுந்த கவலையை அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில், எங்கள் ஆலையின் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்று கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com