சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 29-ஆம் தேதி முதல் 23 நாள்கள் நடைபெற உள்ளது.
சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 29-ஆம் தேதி முதல் 23 நாள்கள் நடைபெற உள்ளது.
ரம்ஜான் உள்ளிட்ட அரசு விடுமுறைகளைத் தவிர்த்து இதர வேலை நாள்களில் சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. ஜூலை 9 வரை கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்திருப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவை வரும் 29-ஆம் தேதி கூடவுள்ளது. கூட்டத் தொடரின் ஒவ்வொரு நாளிலும் எந்தெந்தத் துறைகளின் மானியக் கோரிக்கைகளை விவாதங்களுக்கு எடுத்துக் கொள்வது என்பது குறித்து விவாதிக்க பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (மே 24) நடைபெற்றது.
பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், எதிர்க்கட்சிக் கொறடா அர.சக்கரபாணி, துணைக் கொறடா கு.பிச்சாண்டி, காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
திடீரென வெளியேறிய எதிர்க்கட்சிகள்: அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட எதிர்க்கட்சியினர் ஒரு சில நிமிஷங்களுக்குப் பிறகு திடீரென கூட்டத்தில் இருந்து வெளியேறினர். ஆனாலும், அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதங்களுக்கு எடுத்துக் கொள்வது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன் விவரம்:-
மே 29: வனம், தகவல் தொழில்நுட்பவியல் துறை.
மே 30: பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறை.
மே 31: எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.
ஜூன் 1: மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம்.
ஜூன் 4: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை.
ஜூன் 5: நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத் துறை.
ஜூன் 6: சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.
ஜூன் 7: தொழில் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை.
ஜூன் 8: கைத்தறி மற்றும் துணிநூல், கதர் கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருள்கள்.
ஜூன் 11: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை (கட்டடங்கள், பாசனம்)
ஜூன் 12: வேளாண்மைத் துறை.
ஜூன் 13: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.
ஜூன் 14: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை.
(ஜூன் 15 முதல் ஜூன் 24 வரை பேரவைக் கூட்டத் தொடர் இல்லை)
ஜூன் 25: செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு.
ஜூன் 26: காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை.
ஜூன் 27: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு.
ஜூன் 28: சுற்றுச்சூழல், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு.
ஜூன் 29: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை.
ஜூலை 3: இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம், போக்குவரத்துத் துறை.
ஜூலை 4: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை.
ஜூலை 5: தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
ஜூலை 6: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு.
ஜூலை 9: பொதுத்துறை, சட்டப் பேரவை, நிதித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை.
சட்ட மசோதாக்கள்: சட்டப் பேரவையில் புதிதாக சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை ஆய்வு செய்யப்படும். குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட 
மசோதாக்கள் நிறைவேற்றப்படும். சட்டப் பேரவைக் கூட்டம் தினமும் காலை 10 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.
அதன் பின், நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 
இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த விவாதத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசுவர். 
இறுதியில் பதிலுரையும், புதிய அறிவிப்புகளும் துறையின் அமைச்சரால் வெளியிடப்படும். பேரவையில் தாக்கல் செய்யப்படும் மானியக் கோரிக்கைகள் 
குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்படும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com