தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பு: பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பதற்றம் நீடித்தது.
தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பு: பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பதற்றம் நீடித்தது.
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஐஜிக்கள் வரதராஜு, சண்முக ராஜேஸ்வரன், பெரியய்யா ஆகியோர் தலைமையில் போலீஸார் வியாழக்கிழமை அணிவகுப்பு நடத்தினர். அப்போது ஏராளமான இளைஞர்கள் மறைந்து நின்று போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதில் போல்பேட்டையைச் சேர்ந்த ஜான் (22) காயமடைந்தார். இதன் பிறகு அங்கு பதற்றம் நிலவியதால் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு மீண்டும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அண்ணா நகர் பகுதியில் வியாழக்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 2 இரு சக்கர வாகனம், ஒரு கார் சேதமடைந்தது. ஓர் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மதுக்கடைக்கு தீ வைப்பு: தூத்துக்குடி பிரையண்ட் நகர் 2 -ஆவது தெருவில் உள்ள அரசு மதுக்கடையில் புகுந்த மர்மநபர்கள் சிலர், கடையை சூறையாடி, தீ வைத்துச் சென்றனர். இதில் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. இதேபோல், தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அரசு புறநகர் போக்குவரத்து பணிமனை முன்பு சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். குண்டு புல் தரையில் விழுந்து வெடித்ததால், சேதம் எதுவும் ஏற்படவில்லை. முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பும் வியாழக்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
கார் கண்ணாடி உடைப்பு: தூத்துக்குடி மாநகரில் ரங்கநாதபுரம், தெப்பக்குளத்தெரு, போல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்துச் சென்றனர். இதில் 17 கார்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் போலீஸார் வருகை: மாநகர பகுதியில் ஏற்கெனவே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 15 படை அணியினர் மற்றும் கமாண்டோ படையைச் சேர்ந்த 1,000 போலீஸார் வியாழக்கிழமை தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள், மிகவும் பதற்றமிக்க பகுதியாக கண்டறியப்பட்ட இடங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்டாலின், கமல் மீது வழக்குப் பதிவு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது தடையை மீறியதாக தூத்துக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திக்க அரசியல் தலைவர்கள் பலர் நேரில் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து தடையை மீறியதாகவும், வன்முறை ஏற்பட வாய்ப்பை உருவாக்கியதாகவும், சட்டத்துக்கு புறம்பாக அதிகம் பேர் கூடியதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மீது தூத்துக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் மீதும் தென்பாகம் போலீஸார் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிவையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

பலி எண்ணிக்கை 13 -ஆக உயர்வு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 13 - ஆக உயர்ந்தது.
தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com