முழு அடைப்பு: தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும்
எதிர்க்கட்சிகளின் பொது வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிக் காணப்பட்ட தியாகராயநகர்
எதிர்க்கட்சிகளின் பொது வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிக் காணப்பட்ட தியாகராயநகர்

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும் சென்னை உள்பட பல நகரங்களில் ஆங்காங்கே கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ரயில்கள் வழக்கம்போல் ஓடின. 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
கனிமொழி கைது: சென்னை எழும்பூர் உடுப்பி ஹோம் அருகில் மாநிலங்களவைத் திமுக உறுப்பினர் குழுத் தலைவர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மனித நேய மக்கள்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமான டிஜிபியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். அதன்பின், எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்கு பேரணியாகச் செல்ல முற்பட்டனர். இதையடுத்து கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். சைதாப்பேட்டையில் சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வைகோ கைது: திருநெல்வேலியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
பேருந்துகள் ஓடின: நாகர்கோவில் உள்பட சில இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவங்கள் நடைபெற்றன. எனினும், போலீஸ் பாதுகாப்புடன் தமிழகம் முழுதும் பேருந்துகள் இயக்கப்பட்டன. ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்படவில்லை.
கடைகள் திறந்திருந்தன: முழு அடைப்பு போராட்டத்துக்கு வணிக அமைப்பினர் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், அவரவர் விருப்பப்படி கடைகளை மூடிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர்.
கோவை, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் ஓரளவு மூடப்பட்டிருந்தன. சென்னையில் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன என்றாலும் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. கோயம்பேடு சந்தையும் இயங்கியது. 
பாதிப்பு இல்லை: முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றாலும், பெரிய அளவில் எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. பேருந்துகள் முழுமையாக இயங்கியதுடன், கடைகளும் பெருமளவில் திறந்திருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
70 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை: சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3001 பேரும், தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
போராட்டம் வெற்றி: அதேசமயம், முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன் ஆகியோர் கூறினர்.

சென்னை பாரிமுனையில் மூடப்பட்ட கடைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com