ரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவு செய்துவிட்டோம்: கொள்ளையர்கள் வாக்குமூலம்

ரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவு செய்துவிட்டோம்: கொள்ளையர்கள் வாக்குமூலம்

சென்னை: ரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை - சேலம் விரைவு ரயிலில் துளையிட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர்,  இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5.78 கோடியை பங்கு போட்டு செலவு செய்துவிட்டதாக கைதானோர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே செலவு செய்துவிட்டதாகக் கூறியுள்ளனர். அந்த பணத்தில் கொள்ளையர்கள் தங்கமாக அல்லது சொத்தாக எதையும் வாங்கியிருக்கிறார்களா என்று சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டியில் ரூ.342 கோடி கிழிந்த,சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் 169 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் கொள்ளையர்கள் துளையிட்டு, 4 பெட்டிகளில் இருந்த ரூ.5.78 கோடியை கொள்ளையடித்துச் சென்றனர்.

இச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். பல கட்டங்களாக, நடத்தப்பட்ட விசாரணையில், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர் சிங் தலைமையிலான கொள்ளைக் கும்பல் இந்தப் பணத்தை கொள்ளையடித்திருப்பது சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து மோஹர்சிங்கையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அங்கு முகாமிட்டனர்.

சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில், மோஹர் சிங்கும், அவரது கூட்டாளிகள் சிலரும் வேறு ஒரு வழக்குக்காக அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதேநேரத்தில் கொள்ளையில் சம்பந்தப்பட்ட பிற நபர்களை போலீஸார் தேடினர்.

இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லத்தைச் சேர்ந்த ப. தினேஷ், ரோ.ரோஹன் பார்தி ஆகிய இருவரை சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 12-ஆம் தேதி கைது செய்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் குணா மத்திய சிறையிலும், அசோக்நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக் கும்பல் தலைவன் எச்.மோஹர் சிங்,பி.ருசி பார்தி, ச.கலியா என்ற கிருஷ்ணா, மகேஷ் பார்தி, ந.பிராஜ்மோகன் ஆகிய 5 பேரை தமிழக சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பி.டி. வாரண்ட் பெற்று, 5 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சைதாப்பேட்டை 11ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5 பேரையும் ஆஜர்படுத்தி, 15 நாள்கள் போலீஸ் காவல் கேட்டு சிபிசிஐடி அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 5 பேருக்கும் 14 நாள்கள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்தை முழுவதும் செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com