தமிழகத்திற்கு 15-ம் தேதி ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15 ஆம் தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்போது,
தமிழகத்திற்கு 15-ம் தேதி ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுதில்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15 ஆம் தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்போது, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 5.30 மணியளவில் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தாய்லாந்து நாட்டு பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு வடகிழக்கே 990 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் புயல், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும், அடுத்த 3 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக, நாளை அதிகாலை முதல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், வரும் நவம்பர் 14 ஆம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி முற்பகலில் வலுவிழந்து, புயலாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கஜா கரையை கடக்கும் என்றும், அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மிக கடுமையான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதையொட்டி ரெட் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக நாளை முதல் 15 ஆம் தேதி வரை வங்கக் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நெல்லையில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரெட் அலர்ட் குறித்து பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. அதிக கனமழை பெய்யும் என்பதால், கடலோர பகுதிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com