தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும்: புதுவை முதல்வர் தகவல்

புதுவையில் எம்எல்ஏ தகுதி நீக்கம் காரணமாக காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக போட்டியிடும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும்: புதுவை முதல்வர் தகவல்

புதுவையில் எம்எல்ஏ தகுதி நீக்கம் காரணமாக காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக போட்டியிடும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலக அறையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநருக்கான நிதி அதிகாரத்தை முதல்வர், அமைச்சர்கள், செயலர்களுக்கு பகிர்ந்தளிக்க உத்தரவு பிறப்பித்தது. அதை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கான கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பி வருகிறார்.
 காதி வாரியம், சாலைப் போக்குவரத்து நிறுவனம் (பிஆர்டிசி) உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் தொடங்கப்பட்டன. இங்கு, லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இருக்க முடியாது. ஆனால், ஆளுநரோ லாபம் ஈட்ட வேண்டும்; இல்லையென்றால் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார்.
 ஓய்வு பெற்ற ஏஎப்டி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிதியை வழங்க பட்டானூரில் உள்ள அரசு நிலத்தை விற்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரினோம். அதற்கும் முட்டுக்கட்டை போடப்படுகிறது. தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆளுநரின் எண்ணத்தை ஏற்க முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர், அமைச்சர்களுக்கு பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது.
 ஜிப்மர் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மையம், விபத்தின் போது உடனடி சிகிச்சை-மறுவாழ்வுத் திட்டம், வான்வழி ஆம்புலன்ஸ், இருதய நோய் மையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சேதராப்பட்டில் ஒரு மருத்துவ மையம் அமைக்க 50 ஏக்கர் நிலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ரூ. 1,200 கோடி. இதுதொடர்பாக நான் எழுதிய கடிதத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் சனிக்கிழமை பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்தத் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
 மருத்துவப் படிப்பை 10 ஆண்டுகளில் எழுதி முடிக்க வேண்டும் என்ற மத்திய பல்கலை. விதிமுறையில், அந்தக் கால அளவு 8 ஆண்டாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
 இதனால், பாதிக்கப்பட்ட 50 மாணவர்கள் என்னிடம் முறையிட்டனர்.
 இதுகுறித்து துணைவேந்தரிடம் பேசி, தற்போது அது 9 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வெழுத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 தட்டாஞ்சாவடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் புதுச்சேரி நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, அத்தொகுதி காலியாக உள்ளதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். தொகுதி காலியாக உள்ளது குறித்து மத்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும். கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுகதான் போட்டியிட்டது. எனவே, மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட திமுக விரும்புகிறது. தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க காங்கிரஸ்-திமுக கூட்டணி தயாராக உள்ளது என்றார் முதல்வர் நாராயணசாமி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com