கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு: இதுவரை 50 பேர் பலி

கோவை மாவட்டத்தில் வைரஸ், டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரை சதத்தை எட்டியுள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கு


கோவை மாவட்டத்தில் வைரஸ், டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரை சதத்தை எட்டியுள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இருவர் உயிரிழந்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் இவ்வகை காய்ச்சல் பாதிப்புக்கு சிலர் உயிரிழந்ததாலும், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலும் காய்ச்சலின் பீதி மக்களிடம் தொற்றியது.
இதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு என சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இதன் காரணமாக மாநகராட்சி சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையினர் காய்ச்சல் தடுப்புப் பணிக்கு என கூடுதலாகப் பணியாளர்களை நியமனம் செய்து நோய் தடுப்புப் பணியில் கவனம் செலுத்திவருகின்றனர். ஆனால், அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை. கால நிலை மாற்றம் காரணமாக இக் காய்ச்சல்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல், கல்லீரல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு எளிதில் ஏற்படுவதுடன், உரிய காலத்தில் சிகிச்சை பெறாமல் உடல் நிலை மோசமடைந்து உயிரிழக்கின்றனர்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். கோவை மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்த சிலர் உயிரிழந்திருந்தாலும், கோவை தவிர சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 
இதில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) வரையில், இவ்வகை காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 
பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் சாவு.. திருப்பூர் மாவட்டம், போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலு (55). இவர் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரைப் பரிசோதனை செய்ததில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், பாலு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி லட்சுமி (35). இவர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரைப் பரிசோதனை செய்ததில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 36 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 80 பேரும் என மொத்தம் 121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com