வழக்குகள் முடிந்தவுடன் 8 வழிச்சாலை பணி: முதல்வர் உறுதி

சேலம்- சென்னை  இடையேயான 8 வழிச் சாலை பணி, நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு தொடங்கப்படும்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தார்.
சேலம்  இரும்பாலை  சாலை சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் கே.பழனிசாமி.
சேலம்  இரும்பாலை  சாலை சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் கே.பழனிசாமி.

சேலம்- சென்னை  இடையேயான 8 வழிச் சாலை பணி, நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு தொடங்கப்படும்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தார்.
சேலம் மாநகர் இரும்பாலை சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் உள்ளிட்ட ரூ.30.21 கோடி மதிப்பிலான 30 முடிவுற்ற திட்ட பணிகள் தொடக்க விழா, ரூ.44.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியது:-
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்தோம். பலர் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கின்றனர். நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு அந்தப் பணியும் தொடங்கும்.  சிலர் முதல்வரின் ஊர் சேலமாக இருப்பதால் எட்டு வழிச்சாலை அமைக்கிறார் என்றும், சேலத்துக்கு மட்டும் எட்டு வழிச்சாலை அமைப்பது போல தவறான கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் எட்டு வழிச் சாலை பல்வேறு ஊர்களில் இருந்து சேலம் வழியாகச் சென்னைக்குச் செல்கிறதே தவிர, வேறு ஒரு காரணமும் இல்லை. எதிர்க்கட்சியினர் ஒரு தவறான விமர்சனத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை, கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற காரணத்தினால் சாலைகளின் தேவையும் அதிகரிக்கிறது. எட்டு வழிச்சாலை அமைப்பதால் கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் தூரம் மீதமாகிறது. மேலும், எரிபொருள் தேவையும் குறைகிறது.  
சாலைகள் கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான், புதிய தொழிற்சாலைகள் வரும் சூழல் ஏற்படும். அதன் மூலம் வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் மேம்படும். நல்ல திட்டங்கள் வரும்பொழுது வரவேற்க வேண்டும். 
பொதுமக்கள் தாங்களாக முன்வந்து அரசுக்கு உதவ வேண்டும். எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும்.  தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின்போது,  டி.ஆர்.பாலு மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, கிட்டத்தட்ட 700 கிலோமீட்டருக்கு மேல் இந்திய தேசிய நெடுஞ்சாலை மூலம் ஆணையம் சாலை அமைக்கப்பட்டது. அப்போதெல்லாம் பாதிப்பு ஏற்படவில்லையா?  
புதிய திட்டம் வரும்போது அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று சொல்லி ஒரு சிலர் தூண்டி விடுகிறார்கள். எனவே, எட்டு வழிச்சாலைத் திட்டம் மிக அவசியமாகும்.
விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது:  அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து அரசு நிறைவேற்றி வருகிறது. பணிக்குச் செல்கிற மகளிருக்கு மானிய விலையிலே இருசக்கர வாகனங்களை அரசு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எப்படி விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ அதேபோல இந்த அரசும் விலைவாசி உயராமல் ஏழை, எளிய மக்களை பாதுகாத்து வருகிறது என்றார். விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாசலம்,  ஏ.பி.சக்திவேல், ராஜா,  மருதமுத்து, சித்ரா, மனோன்மணி,  முன்னாள் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com