கார்த்திகை தீபம்: அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

திருவள்ளூர் பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும் அகல் விளக்குகள் தயார் செய்யும் தொழிலில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டில்
அகல் விளக்குகள் தயாரிக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள  இளைஞர் உதயகுமார். (வலது) அகல் விளக்கை வெயிலில் காய வைக்கும் பெண் தொழிலாளி.
அகல் விளக்குகள் தயாரிக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள  இளைஞர் உதயகுமார். (வலது) அகல் விளக்கை வெயிலில் காய வைக்கும் பெண் தொழிலாளி.

திருவள்ளூர் பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும் அகல் விளக்குகள் தயார் செய்யும் தொழிலில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டில் பிளாஸ்டிக் தடை போன்ற காரணங்களால் அகல் விளக்குகளின் தேவையும் அதிகரித்துள்ளதாக இத்தொழிலில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.     

தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்...:    ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாள் விழா 3 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த நாள்களில் வீடுகளை சுத்தம் செய்து அகல் விளக்குகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நல்ல காரியம் நடக்கும். அத்துடன் இடையூறுகள் விலகி, மகிழ்ச்சி ஏற்படும் என்பதும்  ஐதீகம். அந்த வகையில் நிகழாண்டில் கார்த்திகை தீபத் திருநாள் வரும் நவம்பர் 23-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து தைப்பொங்கல் திருநாள் விழாவும் வர இருக்கின்றன. இந்த விழாக்களில் அனைவரது இல்லங்களிலும்  அகல் விளக்குகள், பொங்கல் பானைகள் ஆகியவை இடம் பெறும். இந்த அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு கிடையாது. அதேநேரத்தில் புகையும் குறைவாகவே வெளியேறும் என்பதுடன், கொசுக்களை விரட்டவும் முடியும் என்பது சிறப்பு அம்சமாகும்.   

பணிகள் மும்முரம்:   தற்போதைய நிலையில் திருவள்ளூர் பகுதி கிராமங்களில் இவ்விழாக்களுக்கு பயன்படுத்தப்படும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் களிமண்ணால் தயாராகும் அகல் விளக்குகள் மற்றும் மண்பாண்டங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளதால் அதை தயார் செய்யும் தொழிலில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாவட்டத்தில் காக்களூர், புட்லூர், கொசவன்பாளையம், சீத்தஞ்சேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆரணி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் மண்பாண்டத் தொழிலாளர்கள் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதேபோல், திருவள்ளூர், காக்களூர் ஆகிய பகுதிகளிலும் மண்பாண்டம் மற்றும் அகல் விளக்குகளை தொழிலாளர்கள் தயார் செய்து வருகின்றனர். ஏரிகளில் இருந்து அகல் விளக்குகள் தயார் செய்வதற்கான களிமண் ஒரு லோடு ரூ.1,200-க்கு வாங்கி வருகின்றனர். 

அதேபோல், விறகும் விலை கொடுத்து  வாங்குகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள ஏரிகளில் கிடைக்கும் சுத்தமான களிமண்ணை எடுத்து வருகின்றனர். இந்த மண்ணை தண்ணீர்விட்டு மண்வெட்டி உதவின்றி கால்களால் குழைக்கின்றனர். ஒரு லோடு மண்ணில் நன்றாக பதப்படுத்தி, தரத்துக்கேற்ப 10 ஆயிரம் விளக்குகள் தயார் செய்ய முடியும்.  

ரூ.  2 முதல் ரூ. 40 வரை விலை: இதேபோல் நாள்தோறும் ஒரு தொழிலாளி 500 முதல் 600 வரையிலும், சிறிய அளவில் 1,000 விளக்குகள் வரையிலும் தயார் செய்யலாம். இதற்கு கூலியாக ஒரு நாளைக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரை கிடைக்கும். இதுபோன்று தயாரிக்கப்படும் விளக்குகள் அனைத்தும் தரத்துக்கேற்ப தலா ரூ. 2 முதல் ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு முன்பு வரையில் வியாபாரிகள் முன்கூட்டியே தேவையின் அடிப்படையில் ஆர்டர் அளிப்பர். அதற்கேற்ப களிமண் கொண்டு வந்து தயார் செய்து அளிப்போம். தற்போதைய நிலையில் அந்தளவுக்கு ஆர்டர்கள் எதுவும் வருவதில்லை. இத்தொழில் முன்னோர்கள் ஈடுபட்ட தொழில் என்பதால் எக்காரணம் கொண்டு விட்டுவிடக்கூடாது என்பதற்காக பாரம்பரியமாக ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

திருவள்ளூர்-ஆவடி சாலையைச் சேர்ந்த இத்தொழிலில் ஈடுபட்டு வரும் சாந்தி கூறுகையில், ஏரிகளில் இருந்து சுத்தமான களிமண் கொண்டு வந்து, அதிலிருந்து அகல் விளக்குகள் தயார் செய்கிறோம். 
அதிலும் இயந்திர உதவியின்றி கைகளால் தயார் செய்து வருகிறோம். இந்த வகை விளக்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், இதற்கு முன்பு வரையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி இயந்திரங்கள் மூலம் தயார் செய்யப்படும் அகல் விளக்குகளை பயன்படுத்தி வந்தனர். தற்போதைய நிலையில் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் களிமண்ணால் தயார் செய்த விளக்குகளின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com