தென்னை பாதிப்பால் பொருளாதார இழப்பு

தென்னை பாதிப்பால் பொருளாதார இழப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினத்தில்தான் கஜா புயலின் தாக்கம் அதிக பட்சமாக மணிக்கு 111 கி.மீ. வேகத்தில் வீசியது. எனவே, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. இந்த மூன்று வட்டங்களில்தான் தென்னை சாகுபடி அதிக அளவாக 38,000 ஹெக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அளவில் இங்குதான் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும் மிகப் பெரிய வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களில் புயலால் ஏறத்தாழ 25,000 ஹெக்டேரில் கிட்டத்தட்ட 44 லட்சம் மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களிலும் பெரும்பாலான தென்னை மரங்கள் சாய்ந்தன. இதனால், தென்னை விவசாயிகளுக்கு மிகப் பெரிய வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் தெரிவித்தது:

தென்னை மரங்கள் வளர்ந்து காய்ப்பு தருவதற்கு 5 முதல் 7 ஆண்டுகளாகும். ஒரு ஏக்கரில் 8 முதல் 9 முறை காய்கள் வெட்டப்படும். இதன் மூலம், விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.80 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். ஆனால், புயல் பாதிப்பால் எங்களது வாழ்க்கை 20 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றுவிட்டது. இதனால், கடந்த வாரம் வரை பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்களாக இருந்த தென்னை விவசாயிகளிடம் இப்போது வாழ்க்கையை நகர்த்துவதற்குக் கூட பணம் இல்லை. இதை முற்றிலும் நம்பி இருந்த நிலையில், இப்போது குழந்தைகளின் உயர் கல்விக் குறித்த கனவும் பாழாகிவிட்டது. அவர்களுக்கு நினைத்த கல்வியைக் கொடுக்க முடியாது. எனவே, குழந்தைகளுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது என்கின்றனர் விவசாயிகள்.
இதேபோல, இதை சார்ந்த விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தென்னை சார்ந்த ஏற்றுமதி, தேங்காய் எண்ணெய், தென்னை நார் கழிவு, கயிறு உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தது:
2016 - 17 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்னை மூலம் ரூ. 27,900 கோடி வருவாய் கிடைத்தது. இதில், தமிழ்நாட்டின் பங்களிப்பு ரூ. 8,100 கோடி. தென்னை சாகுபடி மூலம் தேசிய அளவிலான வருவாயில் 29 சதவீதம் வகிக்கும் நிலையில், அதில், தமிழ்நாட்டின் பங்கு 21 சதவீதமாக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத் தென்னை சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ. 350 கோடி ஏற்றுமதி வணிகம் செய்யப்பட்டது. தவிர, இதர வருவாயும் இருக்கிறது. இந்த வருவாயில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

காப்பீடும் இல்லை

ஏற்கெனவே இருந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தென்னைக்குக் காப்பீடு செய்யப்பட்டது. அப்போது மரத்துக்கு ரூ. 9 முதல் 14 ரூபாய் வரை  பிரீமியம் பெறப்பட்டது. இதில், பாதிப்பு ஏற்பட்டால் அதிகபட்சமாக மரத்துக்கு ரூ. 1,750 இழப்பீடு கிடைத்தது. ஆனால், புதிதாக அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்திலும் தென்னை சாகுபடிக்குக் காப்பீடு செய்வது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக, மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் யாரும் காப்பீடு செய்யவில்லை. எனவே, அரசின் நிவாரணத்தையே முழுமையாக நம்பியுள்ளனர் தென்னை விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com