கஜா புயல் பாதிப்பு: நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போர்க்கால நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில்
கஜா புயல் பாதிப்பு: நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போர்க்கால நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அவரது மனு விவரம்: கஜா புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 
புயலுக்கு 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 82 ஆயிரம் பேர் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். 2 லட்சம் மரங்கள் சாய்ந்ததோடு, 735 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. 1.17 லட்சம் வீடுகளும், 88 ஆயிரத்து 102 ஹெக்டேர் விளை நிலங்களும் சேதமடைந்துள்ளன. மின் இணைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு, உடை, உறைவிடம் என அடிப்படைத் தேவைகள் எதுவுமின்றி அவதிக்கு ஆளாகியுள்ளனர். 
மத்திய அரசின் தேசிய புயல் பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் கீழ் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்கள் ஆந்திராவில் 218, ஒடிசாவில் 312, குஜராத்தில் 22, மேற்கு வங்கத்தில் 15 என பல்வேறு மாநிலங்களில் நிவாரண முகாம்கள் உள்ளன. ஆனால், தமிழக கடலோர மாவட்டங்களில் இதுவரை அதுபோன்ற நிவாரண முகாம்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, சோளம், வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 
எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். மத்திய அரசின் தேசிய புயல் பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும்.
புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்புப்பணியில் முப்படையினரையும், துணை ராணுவத்தையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கஜா புயல் சேதங்களை சீரமைக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் என்ன உதவி கோரியது, அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 
அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகளின்றி சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், அந்த நான்கு மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தெரிவித்து விசாரணையை வியாழக்கிழமைக்கு (நவம்பர் 22) ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com