அண்ணா பல்கலை., சென்னை பல்கலை.க்கு இடையே சுவர் கட்ட எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் இடையே மதில் சுவர் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் இடையே மதில் சுவர் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கோட்டூர்புரம் சாலை பகுதியில் சென்னைப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான வளாகமும் அமைந்துள்ளது. இங்கு இயங்கி வரும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே சுற்றுச் சுவர் கட்டும் பணியை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது மேற்கொண்டு வருகிறது. 
இதற்கு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் படித்து வரும் மாணவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து, திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், பல்கலைக்கழகத்தின் அருகே மாணவர்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. மழைக் காலங்களில் நீர் தேங்கி நிற்கும்போது, இரு பல்கலைக்கழகங்களையும் இணைக்கும் பாதையைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருக்கும் உணவு விடுதி, வங்கி, அஞ்சல் வசதிகளை இந்த வழியாகத்தான் சென்று பெற்று வருகிறோம்.
இந்நிலையில், சுற்றுச் சுவர் கட்டினால், இந்த வசதிகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும். சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கும் வரை, சுற்றுச்சுவர் எழுப்பக் கூடாது எனக் கூறினர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தில், சுற்றுச் சுவர் கட்டும் பணியை அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தியது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக வளாக (எஸ்டேட்) அதிகாரி ஸ்டாலின் கூறியது: அண்ணா பல்கலைக்கழகமும், சென்னைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுதான் இந்த சுற்றுச் சுவர் கட்டப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் சில பணிகளுக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஒப்புதலைப் பெறுவதற்கு இந்தச் சுற்றுச்சுவரைக் கட்டுவது கட்டாயமாகிறது. அது மட்டுமின்றி, இரு வேறு பல்கலைக்கழகங்களுக்கு இடையே இவ்வாறு சுற்றுச் சுவர் இல்லாமல் இருப்பதும் முறையாக இருக்காது.
எனவே, மாணவர்களின் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கட்டுமானப் பணி செவ்வாய்க்கிழமை (அக்.9) முதல் மீண்டும் தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com