அண்ணா பல்கலை. பி.எச்டி. நுழைவுத் தேர்வு: ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்புக்கான (பி. எச்டி.) நுழைவுத் தேர்வு, ஆயுத பூஜை விடுமுறை நாள்களை ஒட்டி நடத்தப்பட இருப்பதால், தொலைதூரங்களிலிருந்து


அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்புக்கான (பி. எச்டி.) நுழைவுத் தேர்வு, ஆயுத பூஜை விடுமுறை நாள்களை ஒட்டி நடத்தப்பட இருப்பதால், தொலைதூரங்களிலிருந்து சென்னைக்கு வரும் மாணவர்களுக்கு பயண டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, இத்தேர்வை குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்கள் முன்வைக்கின்றனர்.
இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகள் வியாழன் (அக்.18) மற்றும் வெள்ளிக்கிழமை (அக்.19) கொண்டாடப்படுகின்றன. இதனால் தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை வருவதால், சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களிலும், வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களிலும் இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு ஆகிவிட்டன. மேலும், பண்டிகை நேரங்களில் பேருந்துகளில் இடம்பிடிப்பதும் மிகுந்த சவாலானதாகவே உள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகளில், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
இத்தகைய சூழலில், ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை அக்டோபர் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதற்கான அறிவிப்பையும் கடந்த 4 -ஆம் தேதிதான் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வானது சென்னையில் மட்டுமே நடத்தப்படும். இதனால், தொலைத்தூரங்களில் இருந்து சென்னைக்கு வந்து இந்த நுழைவுத் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயண டிக்கெட் கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கோவையைச் சேர்ந்த முதுநிலை பொறியியல் பட்டதாரி அசோக் கூறியதாவது:
சரஸ்வதி பூஜை விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில்களில் டிக்கெட் கிடைப்பது கடினம் என்பதால், ஒரு நாள் முன்பாக சனிக்கிழமை இரவே ரயில் மூலம் சென்னைக்கு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களும் டிக்கெட் முன்பதிவை இரண்டு மாதங்களுக்கு முன்பே செய்துவிடுவர். 
ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை நான்கு நாள்களுக்கு முன்புதான் வெளியிட்டது. இதனால் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியவில்லை. பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், கடைசி நேரத்தில் பேருந்துகளிலும் இடம் கிடைப்பது சந்தேகம்தான். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நுழைவுத் தேர்வு தேதியை அக்டோபர் 28 -ஆம் தேதிக்கு அண்ணா பல்கலைக்கழகம் மாற்றிவைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.பி.ஜெயா கூறும்போது, நுழைவுத் தேர்வு தேதியை மாற்றி வைக்க இயலாது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com