விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த காவலாளி!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்தவருக்கு காவலாளி சிகிச்சை அளிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை இரவு வெளியானது.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் காயத்துக்கு காவலாளி சிகிச்சை அளிப்பது போன்று சமூக ஊடகங்களில் பரவிய விடியோ காட்சி.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் காயத்துக்கு காவலாளி சிகிச்சை அளிப்பது போன்று சமூக ஊடகங்களில் பரவிய விடியோ காட்சி.


விழுப்புரம் அரசு மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்தவருக்கு காவலாளி சிகிச்சை அளிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை இரவு வெளியானது. இதையடுத்து அந்தக் காவலாளி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் காவலாளியாக பணிபுரிபவர் கார்த்திக். திங்கள்கிழமை பிற்பகல் இந்த மருத்துவமனைக்கு, விழுப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விபத்தில் சிக்கி காலில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வந்தார். அப்போது, அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி கார்த்தி, அந்த ஆட்டோ ஓட்டுநரின் காலில் வழிந்த ரத்தத்தை பஞ்சு கொண்டு துடைத்து, சிகிச்சை அளிப்பது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் அன்றிரவு வெளியானது.
இது குறித்து காவலாளி கார்த்திக் கூறியதாவது: 
மருத்துவமனையில் கட்டு கட்டுமிடத்தில் அதிக கூட்டமாக இருந்ததால், அங்கிருந்து நோயாளிகள் அல்லாதவர்களை அப்புறப்படுத்தச் சென்றேன். அப்போது, அந்த அறையில் காயத்துடன் படுத்திருந்த ஒருவரது காலில் வழிந்த ரத்தத்தை, அவருடன் வந்திருந்த பெண் தனது புடவையால் துடைத்தார். இதைக் கண்ட நான், புடவையால் காயத்தைத் துடைத்தால் நோய் தொற்று ஏற்படும். ஆகையால், பஞ்சை எடுத்து துடையுங்கள் என்று கூறினேன். ஆனால், அதற்குள் அந்த பெண் ரத்தத்தை பார்த்து, மயக்கம் வருவதாகக் கூறி அப்படியே அமர்ந்துவிட்டார். இதனால், அந்த காயத்தில் இருந்து வழிந்த ரத்தத்தை மனிதாபிமான அடிப்படையில் துடைத்தேன். இதை, அங்கிருந்த யாரோ விடியோவாக எடுத்து வெளியிட்டுவிட்டனர் என்றார்.
இதுகுறித்து விழுப்புரம் அரசு மருத்துவமனை குடிமை மருத்துவ அலுவலர் சாந்தி கூறியதாவது: அந்த சம்பவம் நிகழ்ந்த இடம் அவசரப் பிரிவில் உள்ள கட்டு கட்டுமிடம். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்கள், விஷமருந்திய நோயாளிகள் உள்பட 5 நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆகையால், அங்கு வந்த ஒரு நோயாளியின் ரத்தத்தை காவலாளி துடைத்துள்ளார். இதுகுறித்து அந்த காவலாளி உள்பட பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர் ஆகியோரிடம் விளக்கம் பெற்று, உயரதிகாரிக்கு அனுப்பியுள்ளேன். இந்த சம்பவம் தொடர்பாக, அந்த காவலாளி பணி நீக்கம் செய்யப்பட்டார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com