நவம்பர் 1-ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்புப் பேருந்து முன்பதிவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது...
நவம்பர் 1-ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்புப் பேருந்து முன்பதிவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்படுவர். எனவே சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில், தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சுமார் 11,367 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர நவம்பர் 3,4,5 தேதிகளில் தமிழகத்தின் மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். எனவே தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில், கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து ஆங்காங்கே வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும். 

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும். சென்னையில் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படும். அவற்றில் 26 மையங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும்.

தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். அவற்றில் சென்னையில் 80-ம், கோவையில் 20-ம் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு பஸ் பாஸ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

கடந்த ஆண்டு தீபாவளியில் மொத்தம் 5.35 லட்சம் மக்கள் பயணம் செய்தனர். எனவே அதே அளவிலான மக்கள் இம்முறையும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com