சொத்து வரி கடும் உயர்வு: வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி

சென்னை, திருச்சி மாநகராட்சிகளில் அரசாணையில் குறிப்பிடப்பட்ட 50 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாக சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளதையடுத்து வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சொத்து வரி கடும் உயர்வு: வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி

சென்னை, திருச்சி மாநகராட்சிகளில் அரசாணையில் குறிப்பிடப்பட்ட 50 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாக சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளதையடுத்து வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர், மதுரை, சேலம்...

வேலூர், மதுரை, சேலம், திருநெல்வேலி மாநகராட்சிகளில் சொத்து வரி சீராய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 100 வார்டுகளும் ஏ, பி, சி என மூன்று மண்டலங்களாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது;

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சொத்து வரி கணக்கீட்டை எவ்வாறு பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பது குறித்து அரசிடம் இருந்து இதுவரையில் உத்தரவு கிடைக்கப் பெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்

மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் நிதி நெருக்கடி உள்ளதாக அரசு கூறியதையடுத்து, நீண்ட காலமாக சொத்து வரியை உயர்த்தாமல் இருப்பது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சிகள் உள்ளிட்ட மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை உயர்த்தி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

அரசாணை என்ன?:

குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், வாடகை குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தியும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிதியாண்டின் 2018-19 முதல் ஆறு மாத்திலிருந்தே (ஏப்ரல் 2018-செப்டம்பர் 2018) சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் வீட்டின் உரிமையாளர்கள் நிலுவையைச் செலுத்த வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

சீராய்வு படிவங்கள்

சொத்து வரி உயர்வு தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு, சொந்த வீடு வைத்திருக்கும் உரிமையாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் ஆகியோருக்கு சொத்து வரி சீராய்வுப் படிவம் அளிக்கப்பட்டு சொத்து குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட சொத்து விவரங்கள் அடிப்படையில் தற்போது சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு "சீராய்வுக்கு முன்' இருந்த தொகை, "சீராய்வின்படி அரையாண்டு வரி' எனப் புதிய அறிவிப்பு நோட்டீஸ் வீட்டு உரிமையாளர்கள் சென்னை, திருச்சி, மதுரையில் வழங்கப்பட்டு வருகிறது.

கணினியிலும் பதிவு

அரையாண்டு சொத்து வரி உயர்வு விவரம், ஏப்ரல் 2018-செப்டம்பர் 2018 ஆறு மாத காலத்துக்கு ஏற்கெனவே சொத்து வரி செலுத்தியோருக்கு சொத்து வரி உயர்வின் அடிப்படையில் நிலுவை தொகை விவரம் ஆகியவை கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு அறிவிப்பு நோட்டீûஸ பெறாத உரிமையாளர்கள் தொடர்புடைய மாநகராட்சி இணையதளம் மூலம் சொத்து வரி உயர்வை அறிந்து கொள்ள முடியும்.

அரசாணைக்கு முரணாக சொத்து வரி உயர்வு

குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமல் சொத்து வரி உயர்த்தப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சொத்து வரியைக் காட்டிலும் 3 அல்லது 4 மடங்காக உள்ளதால் சென்னை, திருச்சி, மதுரை மாநகராட்சி வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பாரபட்சமான மதிப்பீடு

சென்னை அம்பத்தூர் மாநகராட்சியில் ஏற்கெனவே அரையாண்டுக்கு ரூ.478 சொத்து வரி செலுத்தி வந்த உரிமையாளருக்கு, தற்போது அரையாண்டுக்கு ரூ.1,925 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரையாண்டுக்கு ரூ.458 சொத்து வரி செலுத்தி வந்த உரிமையாளருக்கு, தற்போது அரையாண்டுக்கு ரூ.1,240 நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதே சமயம் ஏற்கெனவே அரையாண்டுக்கு ரூ.488 செலுத்தி வந்த உரிமையாளருக்கு தற்போது அரையாண்டுக்கு ரூ.1,180 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில்...

திருச்சி மாநகராட்சியில் பொன்மலை, அரியமங்கலம், ஸ்ரீரங்கம், கோ- அபிஷேகபுரம் என நான்கு கோட்டங்களிலும் உயர்த்தப்பட்ட சொத்துவரி அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு குடியிருப்புகளிலும் அவர்களுக்கு 3 மடங்கு அல்லது 4 மடங்குக்கு அதிகமாக சொத்துவரி விதிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்துள்ளன.

அரசு விதிமுறைகளின்படி 50 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டிருந்தாலும் அல்லது 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தாலும், இதுவரை இல்லாத வகையில் 4 அல்லது 5 மடங்கு என இஷ்டம்போல சொத்துவரியை உயர்த்தியிருப்பதால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக ஸ்ரீரங்கம் கோட்டம், 6 ஆவது வார்டில் உள்ள ஒருவருக்கு ரூ.21,000 சொத்துவரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ரூ.7000 மட்டுமே வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 3 மடங்கு உயர்த்தி விதிக்கப்பட்டிருக்கிறது. இதே வார்டில் மற்றவர்களுக்கு ரூ.12,000 வரை சொத்துவரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இது நிகழ்ந்திருப்பதாகவும், இதுகுறித்து மனு அளித்தால் நிவர்த்தி செய்யப்படும் என்றும் கூறுகின்றனர்.
 

*

திருவொற்றியூரில் சொத்து வரி வசூலிப்பு குறித்து புகார்

சென்னை திருவொற்றியூர், கத்திவாக்கம் ஆகிய இரண்டு நகராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதையடுத்து புதிதாக சொத்து வரி அறிவிக்கப்பட்டது. இதன்படி திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் சதுர அடிக்கு ரூ. 4.14 வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூரை ஒட்டிய தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் சதுர அடிக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய்வரை வசூலிக்கும் மாநகராட்சி சமீபத்தில் இணைக்கப்பட்ட பகுதியான திருவொற்றியூருக்கு சதுர அடிக்கு ரூ.4.14 என அறிவித்துள்ளது.

சொத்து வரியை வசூலிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளுக்குச் சென்று வரிபாக்கியை கேட்கும்போதுதான் பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. பின்னர் அவர்களைச் சமாதானப்படுத்தும் அதிகாரிகள் சில இடங்களில் ரூ. 2.25, ரூ. 2.70, ரூ.3 என தங்கள் விருப்பம் போல வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது வீடுகளின் கட்டுமான, தரை உள்ளிட்டவைகளின் மதிப்புகளை ஆய்வு செய்து வரி விதிக்கிறோம் என்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com