கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் தொடக்கம்

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை முதல்


தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீர் எடுப்பதை தடை செய்தும், வணிகப் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3 -ஆம் தேதி உத்தரவிட்டது.
நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற உத்தரவை திரும்ப பெறக் கோரியும், தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க கோரியும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மொத்தம் 4,500 தனியார் லாரிகள் இயக்கப்படாததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆதரவு: இந்த நிலையில், கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் செவ்வாய்க்கிழமை மாலை முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து
கிரேட்டர் தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
நிலத்தடி நீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உயர்நீதிமன்றம் உடனே ரத்து செய்ய வேண்டும். தனியார் லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்.
அபாயம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வணிக வளாகங்கள், தனியார் தங்கும் விடுதிகள், உணவகங்கள், வீடுகள் ஆகியவற்றின் 80 சதவீத குடிநீர்த் தேவையை கேன் தண்ணீரே பூர்த்தி செய்கிறது. தண்ணீர் லாரி உரிமையாளர்களும், கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் தற்போது ஒருசேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com