மஹா புஷ்கரம் 6-ஆவது நாள்: தாமிரவருணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருநெல்வேலி தைப்பூச மண்டப படித்துறையில் செவ்வாய்க்கிழமை புனித நீராடிய பக்தர்கள். 
திருநெல்வேலி தைப்பூச மண்டப படித்துறையில் செவ்வாய்க்கிழமை புனித நீராடிய பக்தர்கள். 


தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணியில் புனித நீராடி வழிபட்டனர்.
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதைத் தொடர்ந்து தாமிரவருணி நதியில் மஹா புஷ்கர விழா கடந்த 11 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆறாவது நாளான செவ்வாய்க்கிழமை காலை முதல் பக்தர்கள் தாமிரவருணியில் புனித நீராடினர். வெளிமாநில பக்தர்கள் நீராடும்போது கரையில் கற்பூர தீபமேற்றி முன்னோர்களை வழிபட்ட பின்பு நதியில் தீபத்தை விட்டனர். மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் நீரில் கரைத்தனர்.
பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், முக்கூடல், கோடகநல்லூர், திருநெல்வேலி குறுக்குத்துறை, கைலாசபுரம், வண்ணார்பேட்டை, அருகன்குளம் (ஜடாயுதீர்த்தம்), சீவலப்பேரி, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலையில் திருநெல்வேலி சந்திப்பு அருகே கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தைப்பூச மண்டப படித்துறையில் திருபள்ளியெழுச்சி, மங்கள நாகசுர இசை, சங்கல்ப ஸ்நானம் ஆகியவை நடைபெற்றன.
தாமிரவருணி மஹா புஷ்கர ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மஹா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. அதன்பின்பு தேவார இன்னிசை மற்றும் வேதபாராயணம் நடைபெற்றது. மாலையில் பக்தி இன்னிசையும், மகாராஜநகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சீவலப்பேரியில் துர்காம்பிகா தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற மஹா புஷ்கர விழாவில் மஹா சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் புனித நீராடினர்.
அன்னதானம்: சிருங்கேரி சாரதா மடம் மற்றும் ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் கைலாசபுரத்தில் உள்ள சங்கீத சபாவில் தொடர்ந்து 6ஆவது நாளாக மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் உணவருந்தி முடித்ததும் தேவார, திருவாசக பாடல்களைப் பாடிச் சென்றனர். வண்ணார்பேட்டை, குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செயலர் சோமசுந்தரம் கூறுகையில், தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி எங்கள் அமைப்பு சார்பில் கடந்த 12 ஆம் தேதி முதல் கைலாசபுரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அமைப்பின் தலைவர் வேதாந்தம் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தினமும் 3 வேளையும் உணவு வழங்கி வருகிறோம். 40 சமையல் கலைஞர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். புஷ்கர விழாவை இந்துக்களின் விழாவாக பார்க்கக் கூடாது. நதிதான் அனைத்து உயிரினங்களின் ஜீவ நாடி. அதற்கு நன்றி சொல்வதும், பேணிப் பாதுகாப்பதும் அனைவரின் கடமையாகும். அந்த விழிப்புணர்வை அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com