ஆயுதபூஜை-விஜயதசமி: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்
ஆயுதபூஜை-விஜயதசமி: ஆளுநர், முதல்வர் வாழ்த்து


ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தீயவைகள் அழிந்து நல்லவைகள் மேலொங்கும் என்பதை உணர்த்துவதற்கான பண்டிகையாக ஆயுத பூஜை விளங்குகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் நாம் மேற்கொண்டுள்ள பணிகளில் வெற்றி அடைந்து இலக்கினை வெற்றிகரமாக அடைவோம்.
விஜயதசமி திருநாளில் நமக்கான ஆற்றல்களைப் புதுப்பித்து தொடர்ந்து பணியாற்றுவோம். உண்மை, நேர்மை, நல்லெண்ணம் ஆகியவற்றைக் கடைபிடித்து மேலும் மேலும் வளர்ச்சி அடைவோம்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி: வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையான வீரம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றை அருள வேண்டி, நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாள்களின், முதல் மூன்று நாள்கள் வீரமிகு துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாள்கள் செல்வம் பொழியும் லட்சுமி தேவியையும், நிறைவாக மூன்று நாள்கள் கல்வி தரும் சரஸ்வதி தேவியையும், மக்கள் பக்தியுடன் போற்றி வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமாகும்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்ந்து, மக்கள் தங்கள் தொழில் சார்ந்த கருவிகளை இறைபொருள்களாகப் பாவித்து, தொழில் பெருக அதற்கு பூஜை செய்து, வாழ்வில் வளம் பெற தெய்வத்தை வணங்கிடும் நன்னாள் ஆயுத பூஜையாகும்.
விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் செயல்கள் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முதலாக கல்வியை தொடங்குதல், புதிய தொழில்களை ஆரம்பித்தல் போன்ற புதிய முயற்சிகளை தொடங்கி விஜயதசமி திருநாளை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த நாளில் தமிழக மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, நலமுடனும், வளமுடனும் வாழ்ந்திட மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: மனித சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கும் வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்கும் மாபெரும் சக்திகளாக துர்கா, சரஸ்வதி, லட்சுமி ஆகியோருக்கு நன்றியையும், வணக்கத்தையும், வேண்டுதலையும் தெரிவிக்கும் வகையில், 9 தினங்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுறது. 
பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்பு நாட்டின் பலத்தை உலக நாடுகள் உணரும்படி உயர்த்திக் காட்டியிருக்கிறார். ஜி .எஸ்.டி. போன்ற தீவிர பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இனி வரும் ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு சென்று உலகின் முதல்நிலை நாடாக இந்தியாவை உருவாக்க அன்னையின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com