குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகள்: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என,


குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, புதுச்சேரியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விவரம்: 
குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட எனது கணவர் ரமேஷ், காலாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் தடுப்புச் சட்டத்தின் சட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமல், எனது கணவர் மீது இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. மேலும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து எனது கணவரை விடுவிக்கக் கோரி புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை மனு அளித்தேன்.அந்த மனுவை அதிகாரிகள் முறையாகப் பரிசீலிக்கவில்லை. மேலும், குண்டர் தடுப்புச் சட்ட அறிவுரை குழுமம் காலதாமதமாகவே இந்த உத்தரவை உறுதி செய்துள்ளது. சட்ட விதிமீறல்கள் உள்ள நிலையில் எனது கணவரின் கைதை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவே குண்டர் தடுப்புச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை.
இந்த வழக்கில் இருந்து தனது கணவரை விடுவிக்கக் கோரி மனுதாரர் தரப்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை அதிகாரிகள் முறையாக பரிசீலிக்காமல், அறிவுரைக் குழுமத்திடம்தான் முறையிட வேண்டும் என தங்களது கடமையைத் தட்டிக் கழித்துள்ளனர். அறிவுரைக் குழுமத்திடம் விசாரணை நிலுவையில் இருந்தாலும், தன்னிடம் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து அரசு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியிள்ளது.
எனவே, இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இதனைத் தவிர்த்து வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாத நிலைக்கு இந்த நீதிமன்றத்தை அதிகாரிகள் தள்ளியுள்ளனர்.
இனிவரும் காலங்களில், குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது சமூகவிரோதிகள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்காத வகையில், அதன் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com