குலசை தசரா திருவிழாவில் மகிஷாசுர சம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் பத்தாம் நாளான
குலசேகரப்பட்டினம் கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஒருபகுதியினர்.
குலசேகரப்பட்டினம் கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஒருபகுதியினர்.


தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மகிஷாசுரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவிலேயே கர்நாடக மாநிலம் மைசூரு அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டில் அக்.10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை சேகரித்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வீதிதோறும் நடத்தி காணிக்கை வசூலித்தனர். விழா நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் கலையரங்கில் பரத நாட்டியம், பக்தி இன்னிசை, சமயச் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு தசரா குழுக்கள், அமைப்புகள் சார்பில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை (அக்.19) நள்ளிரவு நடைபெற்றது. இதையொட்டி, காலை முதலே பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவியத் தொடங்கினர். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளிய அம்மன் பல்வேறு வேடங்களில் வந்த மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், கோயில் கலையரங்கம் ஆகியவற்றில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை (அக். 20) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்பட்டு முக்கிய வீதிகளில் பவனி வருவார். மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். பக்தர்கள் காப்பு அவிழ்த்து தங்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வர். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com