தேமுதிக பொருளாளர் பிரேமலதா

தேமுதிகவின் பொருளாளராகப் பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா


தேமுதிகவின் பொருளாளராகப் பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேமுதிகவின் உயர்நிலைக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தேமுதிகவின் அவைத் தலைவராக வி.இளங்கோவன், பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த், கொள்கைபரப்புச் செயலாளராக அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தீபாவளி போனஸ்: விஜயகாந்த் மனைவியான பிரேமலதா கட்சியில் முக்கிய பதவி எதையும் வகிக்காமல் அடிப்படை உறுப்பினராகவே பல ஆண்டுகள் இருந்து வந்தார். அதே சமயம் தேர்தல் பிரசாரம், கட்சி ரீதியான முடிவுகளை எடுப்பதில் முதன்மையானவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் பொருளாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்வான பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பொருளாளர் பதவி கிடைத்திருப்பது எனக்கு தீபாவளி போனஸ் போல இருக்கிறது. இந்தப் பதவி எனக்கு அளிக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. கூட்டத்தில்தான் விஜயகாந்த் அறிவித்தார்.
14 ஆண்டுகளாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்துதான் பணியாற்றினேன். உண்மையான உழைப்புக்கு விஜயகாந்த் அங்கீகாரம் கொடுப்பார் என்பதற்கு அடையாளம் இது.
இடைத்தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை. மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் ஒன்றாக நடைபெற வேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் நேரத்தில்தான் தேமுதிகவின் நிலைப்பாடு தொடர்பான முடிவுகளை விஜயகாந்த் எடுப்பார்.
சபரிமலைக்குச் பெண்கள் செல்லலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தேவசம்போர்டு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மதத்துக்கு ஒவ்வொரு நடைமுறை உண்டு. அதை உடைப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
குடும்பக் கட்சி: குடும்பக் கட்சி என்று பிற கட்சிகளை விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ள நிலையில், தற்போது தேமுதிகவிலும் அதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதே என்று கேள்வி எழுப்புகிறீர்கள். 
குடும்பக் கட்சி என்று விஜயகாந்த் எப்போதும் விமர்சனம் செய்தது இல்லை. குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல முடியாது. குடும்பத்திலிருந்து வரக் கூடியவர்களைக் கட்சியின் நிர்வாகிகளும், கடைக்கோடித் தொண்டர்களும் ஏற்றுக்கொண்டால் போதும். 14 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராக இருந்துதான் நான் இந்தப் பதவிக்கு வந்துள்ளேன்.
ஊழல் மிகுந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அகற்றிவிட்டு, நல்ல ஆட்சியை ஏற்படுத்துவோம். அது விஜயகாந்த் தலைமையிலான ஆட்சியாக இருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com