பிளாஸ்டிக் தடை: பேப்பர் கப்களுக்கு விலக்குக் கிடைக்குமா?: ஆய்வுக் குழு தீவிர ஆலோசனை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளது.
பிளாஸ்டிக் தடை: பேப்பர் கப்களுக்கு விலக்குக் கிடைக்குமா?: ஆய்வுக் குழு தீவிர ஆலோசனை


ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், மக்களிடம் மிக அதிகளவு பயன்பாட்டில் உள்ள பேப்பர் கப்களுக்கு தடையில் இருந்து விலக்குக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக பேப்பர் கப்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அரசின் சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 
முதல் கட்டமாக, மாநிலத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் தடை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக் தடையை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இந்தக் குழுவானது இதுவரை இரண்டு முறை கூடி பிளாஸ்டிக் தடை தொடர்பான நடைமுறைகளை ஆய்வு செய்துள்ளது.
இந்த வழிகாட்டும் குழுவில், உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, தொழிலாளர் நலத் துறை உள்பட மக்களோடு நெருங்கிய தொடர்புடைய அரசுத் துறைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு முறை நடைபெற்ற கூட்டங்களிலும் பிளாஸ்டிக் தடை தொடர்பாக தங்களது துறைவாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விவரித்தனர்.
பிளாஸ்டிக் கப்கள்: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களில், பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட பேப்பர் கப்களும் அடங்கும். இந்த வகை கப்கள், தேநீர் கடைகள், உணவகங்களில் கண்ணாடி டம்ளர்களை விரும்பாதவர்களுக்கு மாற்றாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகை கப்கள் தினந்தோறும் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகை கப்களுக்கு தடை விதிக்கக் கூடாது என தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக அரசுத் துறை நிறுவனமான தமிழ்நாடு காகித ஆலை நிறுவனமானது, இதுபோன்ற பேப்பர் கப்களை ஆண்டுக்கு 2 ஆயிரம் டன் அளவுக்கு உற்பத்தி செய்கிறது. எனவே, பிளாஸ்டிக் தடை பட்டியலில் பேப்பர் கப்களை இணைக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசின் குழு: இந்தச் சூழ்நிலையில், தடை பட்டியலில் இருந்து பேப்பர் கப்களை நீக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆராய தமிழக அரசின் சார்பில் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இந்தக் குழுவில், மத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்பக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. இந்தக் குழு இதுவரை ஒருமுறை கூடி பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட பேப்பர் கப்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து விவாதித்துள்ளது.
இது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பேப்பர் கப்களில் 95 சதவீதம் காகிதமும், 5 சதவீதம் மட்டுமே பிளாஸ்டிக் உள்ளது. எனவே, இதனை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் வகைகளில் சேர்க்க இயலாது என்ற கருத்து அந்த கப்களை உற்பத்தி செய்வோர் தெரிவிக்கின்றனர். இந்தக் கோரிக்கையை அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஆய்வுக் குழு இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், மீண்டும் குழு கூடி விரிவாக ஆய்வு செய்து இது குறித்து முடிவு செய்யும். இந்தக் குழுவின் முடிவு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் எனத் தெரிகிறது. 


மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு கடிதம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளாஸ்டிக் தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் அண்மையில் அனுப்பினார். 
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் ஆகியவற்றில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பிளாஸ்டிக் தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு அரசு அலுவலகமும் அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், பொது மக்களிடையே பிளாஸ்டிக் தடை தொடர்பாகச் செய்யப்பட்டு வரும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டுமென தனது கடிதத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com