மனோன்மணீயம் பல்கலை. ஊழியர்கள் 42 பேர் பணி நீக்கம்: ராமதாஸ் கண்டனம்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பணியாளர்கள் 42 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பணியாளர்கள் 42 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் கடந்த 2008 -ஆம் ஆண்டு முறையான தேர்வுகளின் மூலம் நியமிக்கப்பட்டனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திடீரென அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ள காரணம் ஏற்க முடியாததாகும்.
தகுதியற்ற ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்தக்கூடாது என்று கடந்த 2006 -ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் காரணம் காட்டியும், 42 பணியாளர்களும் தகுதியில்லாமல் ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர் என்று கூறியும் அவர்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். முறையாக நேர்காணல் நடத்தப்பட்டு, கல்வித் தகுதி சரிபார்க்கப்பட்ட பிறகுதான் அனைவரும் பணியமர்த்தப்பட்டனர். அது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை எந்தக் குறையும் இல்லாமல் செய்து வந்துள்ளனர். அது மட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பாஸ்கரன், கடந்த 2016 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றது முதல் இப்போது வரையிலான இரண்டரை ஆண்டுகளில் இவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. அவ்வாறு இருக்கும்போது, திடீரென அவர்களுக்கு தகுதி இல்லை என்று கூறி பணி நீக்கம் செய்வது பழிவாங்கும் நடவடிக்கை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com