அரசியல் கட்சி தொடங்குவது இப்போதைக்கு இல்லை

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நேரம், காலம் பார்த்து அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அரசியல் கட்சி தொடங்குவது இப்போதைக்கு இல்லை

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நேரம், காலம் பார்த்து அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
 மக்களவைத் தேர்தல் குறித்த எனது நிலைப்பாட்டை தேர்தல் அறிவிக்கும்போது தெரிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.
 நடிகர் ரஜினிகாந்த், வரும் டிசம்பரில் தனது பிறந்த நாள் (டிச.12) அன்று அரசியல் மாநாட்டை நடத்தி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அவர் பேசியுள்ளார்.
 "பேட்ட' படப்பிடிப்பு முடிந்து வாராணசியில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: "பேட்ட' படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. படம் நன்றாக வந்துள்ளது. ரொம்ப சந்தோஷம். இந்தப் படப்பிடிப்பு நவம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், படக்குழுவினர் எல்லோரும் சேர்ந்து கடுமையாக உழைத்து 15 நாள்களுக்கு முன்பே முடித்துவிட்டோம். நல்ல முறையில் முடிந்தது. டிசம்பர் 12-ஆம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் என்று செய்திகள் வெளி வந்துள்ளன. கட்சி தொடங்குவது குறித்து அப்போது அறிவிப்பு வெளியாகாது.
 90 சதவீதப் பணிகள் முடிவு: கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கட்சி தொடங்குவது குறித்து நேரம், காலம் பார்த்து அறிவிப்பேன். மக்களவைத் தேர்தல் குறித்த எனது நிலைப்பாட்டை தேர்தல் அறிவிக்கும்போது சொல்வேன்.
 சபரிமலை விவகாரம்: பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனினும், கோயில் என்று கூறும்போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சடங்கு இருக்கும். காலம்காலமாக இருந்து வரும் ஐதீகம் இருக்கும். அதில் யாரும் தலையிடக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.
 இப்படி சொல்வதால், உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நான் உதாசீனப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.
 இந்த விவகாரத்தைப் பொருத்தவரை நான் சொல்ல வருவது மதம் தொடர்புடைய விஷயங்கள், சடங்குகள் இவற்றில் எல்லாம் கொஞ்சமும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். 40 நாள்கள் தமிழகத்தில் நான் இல்லை. அதனால் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தெரியவில்லை.
 "மீ டூ' விவகாரம்: "மீ டூ' இயக்கம் பெண்களுக்கு ஒரு சாதகமான இயக்கம், பயன் அளிக்கக் கூடியது. அதைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. சரியாகப் பயன்படுத்த வேண்டும். சின்மயி புகாரை வைரமுத்து மறுத்துள்ளார். அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது, அதுகுறித்து வழக்கு தொடரப் போவதாக வைரமுத்து கூறியுள்ளார் என்றார்.
 ரஜினியின் பராக்: "பேட்ட' படத்தின் வசனம் ஒன்றைக் கூறுமாறு செய்தியாளர்கள் ரஜினியிடம் கேள்வி எழுப்பினர். சிறிது நேரம் சிரித்த ரஜினி அவருடைய ஸ்டைலில், "பேட்ட பராக்..' என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com