நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு விவகாரம்: லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு

தமிழகநெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம்
நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு விவகாரம்: லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு

தமிழகநெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைசார்பில் திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமி பதவி வகித்தபோது, தனது நெருங்கிய உறவினர்களுக்குரூ. 4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறைஒப்பந்தங்களைவழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து,அக்டோபர் 12-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அரசியலில் உயர் பதவி வகிக்கக்கூடிய ஒருவர் மீது இதுபோன்று குற்றம் சாட்டப்பட்டால், குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அவர் மீதுள்ள சந்தேகங்கள் அகலும்.ஆகவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைசார்பில்வழக்குரைஞர் யோகேஷ் கன்னா உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றிட சட்டப் பிரிவு 482-இன்படி உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தைப் பொருத்தமட்டில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றுதான் மனுதாரர் கோரியிருந்தார். சிபிஐ விசாரணையை அவர் கோரவில்லை. 
அதன்படி, இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்து, அதன் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தை மறைத்து நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது என்பது ஏற்புடையதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com