டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலிலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கொசு வலை பாதுகாப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கொசு வலை பாதுகாப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள்.


சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலிலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் டெங்கு, பன்றிக் காய்ச்சலில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களில் 82 நடமாடும் மருத்துவக் குழுக்களை தமிழக சுகாதாரத் துறை அமைத்துள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு வகையான காய்ச்சல் பரவி வருவதால் அதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், குறிப்பாக சென்னை கொளத்தூர் மேற்குத் தெருவைச் சேர்ந்த 6 வயது நிரம்பிய தீக்ஷா, தக்ஷண் ஆகிய இரட்டைக் குழந்தைகள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்தது, பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. 
200 பேர் பாதிப்பு: இது குறித்து சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலிலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் அக்டோபர் மாதத்தில் மட்டும் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சுமார் 10 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் சுமார் 23,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால், சுகாதாரத் துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை தமிழகம் முழுவதும் 2,400 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறை சார்பில் 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள், கொசு ஒழிப்பு விரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
20,000 பணியாளர்கள்: சுகாதாரத் துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 10 தற்காலிகப் பணியாளர்களும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 20 தற்காலிகப் பணியாளர்களும், பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு பேரூராட்சிக்கு 10 தற்காலிகப் பணியாளர்களும், நகராட்சி, மாநகராட்சி சார்பில் 250-300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 20 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எலைசா முறையில் டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் ரத்தப் பரிசோதனை மையங்கள் 31-இல் இருந்து 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவி, ரத்தக் கூறுகள், ரத்தம், சுய தற்காப்பு சாதனங்களும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
எழும்பூர் அரசு மருத்துவமனையில் 27 குழந்தைகளுக்கு சிகிச்சை
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 27 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ரத்தப் பரிசோதனையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சுமார் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் சிலரும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 044 24350496, 044 24334811, 94443 40496, 87544 48477 என்ற எண்களில் இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com