பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக பொதுத் துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


தமிழக பொதுத் துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
லாபம் ஈட்டும் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-இன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 என உள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் 2017-18-ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித் தொகை வழங்கப்பட உள்ளன.
லாபம் ஈட்டும் நிறுவனங்கள்: லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் ஒதுக்கக் கூடிய உபரி தொகை கணக்கில் கொள்ளப்படும். இந்த கணக்கின்படி, 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் அளிக்கப்படும்.
நஷ்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீத போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்.
யார் யாருக்கு எவ்வளவு? தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் அளிக்கப்படும்.
லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 சதவீதம் வரையிலும் அவை ஒதுக்கக் கூடிய உபரித் தொகைக்கு ஏற்ப அளிக்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்துத் தகுதியுடைய பணியாளர்களுக்கும் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
சி மற்றும் டி பிரிவு: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போன்று இந்த ஆண்டும் 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியதைப் போன்று 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும்.
அரசு ரப்பர் கழகம், வனத்தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் ஒதுக்கக் கூடிய உபரித் தொகைக்கு ஏற்ப 20 அல்லது 10 சதவீதம் அளவுக்கு போனஸ் அளிக்கப்படும்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு அந்தந்த சங்கங்கள் ஒதுக்கக் கூடிய உபரி தொகைக்கு ஏற்ப 20 அல்லது 10 சதவீதம் அளவுக்கு போனஸ் வழங்கப்படும்.
தற்காலிக பணியாளர்கள்: தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.4,000, நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்களுக்கு ரூ.3,000-மும் அளிக்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு சங்கத் தொழிலாளர்களுக்கு ரூ.2,400 முதல் ரூ.3,000 வரை வழங்கப்படும்.
போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400-ம், அதிகபட்சம் ரூ.16,800-ம் பெறுவர். இதனால், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 58 ஆயிரத்து 330 தொழிலாளர்கள் பயன் பெறுவர். ரூ.486.92 கோடி போனஸாக அளிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com