அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு: பேராசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகார் தொடர்பாக இரு பேராசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனர்.
அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு: பேராசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகார் தொடர்பாக இரு பேராசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற்ற பருவத் தேர்வு எழுதியவர்களில், 3.02 லட்சம் பேர் தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் விடைத் தாள்களை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஒரு கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 16,636 பேருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருந்தது. இதில் பெரும்பாலான மாணவர்களின் மதிப்பெண்கள், அவர்கள் எழுதிய விடைகளுக்கான மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. மேலும், கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்க வேண்டிய சில மாணவர்களுக்கு, குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் வந்தன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா, மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி பேராசிரியர் பி.விஜயகுமார், உதவிப் பேராசிரியர் ஆர்.சிவக்குமார், கண்காணிப்பாளர்களாக இருந்த ஆர்.சுந்தரராஜன், எம்.மகேஷ்பாபு, என்.அன்புச்செல்வன், சி.என்.பிரதீபா, எல்.பிரகதீஸ்வரன், எம்.ரமேஷ்கண்ணன், எஸ்.ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பேராசிரியர்களிடம் விசாரணை: இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை செய்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் பி.விஜயகுமார், உதவிப் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பினர். அந்த அழைப்பாணையின்படி, இருவரும் சென்னை ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முறைகேடு எப்படி நடைபெற்றது, எவ்வளவு பணம் கைமாறியது, பணம் பெற்றுக் கொண்டு எத்தனை மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டது ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
மாலை வரை நடைபெற்ற இந்த விசாரணையில், வழக்குத் தொடர்பாக பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர். இருவரும் அளித்த தகவல்களை போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com