15-ஆவது நிதிக் குழு இன்று வருகை: சென்னையில் இரண்டு நாள்கள் ஆலோசனை

மத்திய அரசின் 15-ஆவது நிதிக் குழுவினர் புதன்கிழமை சென்னை வருகின்றனர். நிதி, பொருளாதாரம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து இரண்டு நாள்கள் ஆலோசிக்கப்பட உள்ளது.


மத்திய அரசின் 15-ஆவது நிதிக் குழுவினர் புதன்கிழமை சென்னை வருகின்றனர். நிதி, பொருளாதாரம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து இரண்டு நாள்கள் ஆலோசிக்கப்பட உள்ளது.
15-ஆவது நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங், உறுப்பினர்கள் அனூப் சிங், அசோக் லகிரி, ரமேஷ் சந்த், செயலாளர் அரவிந்த் மேத்தா ஆகியோர் அடங்கிய குழுவினர் புதன்கிழமை சென்னை வரவுள்ளனர்.
இக்குழுவினர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை ஆலோசிக்கவுள்ளனர். இதைத் தொடர்ந்து, வரும் வியாழக்கிழமை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் நிதிக் குழு ஆலோசிக்கிறது.
இதனிடையே, புதன்கிழமை மாலையில் சென்னையில் உள்ள பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நிதிக் குழு நடத்தவுள்ளது. இந்தக் கூட்டம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன.
சென்னையில் இரண்டு நாள்கள் ஆலோசனைக் கூட்டங்களைத் தொடர்ந்து, வரும் 8 மற்றும் 9 -ஆம் தேதிகளில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் செல்லும் நிதிக் குழு, அங்கு களஆய்வுப் பணிகளையும் மேற்கொள்கிறது.
நிதி ஒதுக்கீடு எவ்வளவு? ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதிகளை ஒதுக்குவது தொடர்பான பரிந்துரைகளை நிதிக் குழு அளிக்கும். இதன் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு அளிக்கப்படும். அந்த வகையில், நிதிகளை அளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்பாக, மாநில வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நிதிக் குழு நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இப்போது தமிழகத்தில் நிதிக் குழு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com