7 பேர் விடுதலை: ஆளுநருக்கு அரசு பரிந்துரை; ராஜீவ் கொலை வழக்கு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது என
7 பேர் விடுதலை: ஆளுநருக்கு அரசு பரிந்துரை; ராஜீவ் கொலை வழக்கு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 இதற்கான பரிந்துரை தமிழக ஆளுநருக்கு அரசு சார்பில் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் கடந்த 2014-இல் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அப்போது தெரிவித்தது.
 அதைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் 2014 பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழகம் அரசு கடிதமும் எழுதியது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது கைதிகள் சார்பிலும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
 இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் கருணை மனுவை தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என்று கூறி, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவையும் முடித்து வைத்தனர்.
 உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
 இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விதி எண்.161-இன் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்: இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:
 உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பேரறிவாளன் மனுவை இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் கீழ் பரிசீலிக்கலாம் என கூறியிருக்கின்ற போதிலும், அவரைத் தவிர மேலும் 6 நபர்களும் முன் விடுதலை மனுக்களை ஆளுநருக்கும், அரசுக்கும் அளித்திருந்ததைக் கருத்தில்கொண்டு இவர்களுடன் சேர்த்து மொத்தம் 7 பேரையும் முன் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றார்.
 பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. எனவே அந்த அடிப்படையில் மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே, சட்டப் பிரிவு 161-இன் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளோம்.
 ஆளுநருக்கு உடனடியாக பரிந்துரை அனுப்பிவைக்கப்படும். மேலும், அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். மறுப்பதற்கு இடமில்லை. ஏனெனில், ஆளுநர்தான் மாநில நிர்வாகத்தின் தலைவர். அரசின் ஆணைகள் அனைத்துமே ஆளுநரின் பேரில்தான் விடுவிக்கப்படுகின்றன. எனவே, அமைச்சரவை கூடி எடுத்த முடிவை, ஆளுநர் கால தாமதம் செய்வதற்கோ அல்லது மறுப்பதற்கோ இடமே இல்லை.
 இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது என்பதெல்லாம் கடந்துவிட்டது. இன்றைக்கு என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும். இந்த ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எண்ணம். அந்த எண்ணத்தில் அடிப்படையில் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.
 "சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்'
 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் வைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 தமிழக அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் டி.ஜெயகுமார் அளித்த பேட்டி:
 மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிப்பதற்கு மத்திய அரசுக்குப் பரிந்துரைப்பது.
 மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு "டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்ற பெயரை வைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைப்பது.
 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக அமைச்சரவை ஒப்புதலுடன் 2016 டிசம்பரில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த நிலையில், அந்தக் கோரிக்கையை மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com