சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் திடீர் ஆய்வு நடத்தப்படுமா?

ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதன் எதிரொலியாக, சேர்க்கை முடிந்த பிறகு பேராசிரியர் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையை பொறியியல்
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் திடீர் ஆய்வு நடத்தப்படுமா?

ஆசிரியர் -மாணவர் விகிதாசாரம்

ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதன் எதிரொலியாக, சேர்க்கை முடிந்த பிறகு பேராசிரியர் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையை பொறியியல் கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஆசிரியர் -மாணவர் விகிதாசாரம் பாதிக்கப்பட்டு, பொறியியல் கல்வியின் தரம் குறையும் என கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது குறித்து, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகமும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் (ஏஐசிடிஇ) திடீர் ஆய்வுகளை நடத்த வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கல்வித் தரம், வேலைவாய்ப்பு குறைந்தது போன்ற காரணங்களால் கடந்த 2013 - ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது, நிகழ் கல்வியாண்டிலும் (2018-19) எதிரொலித்து, மாணவர் சேர்க்கை மேலும் சரிந்துள்ளது.
இந்த ஆண்டு பொதுப் பிரிவு கலந்தாய்வின் முடிவில், மொத்தம் இடம்பெற்றிருந்த 1,72,581 இடங்களில் 74,601 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதாவது மொத்தத்தில் 43 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 ஆயிரம் இடங்கள் குறைவாகும். 
மேலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 90 ஆயிரம் பி.இ. இடங்கள் சேர்க்கை பெறவில்லை. 22 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 47 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை என, நிகழ் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆள்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளை பொறியியல் கல்லூரிகள் மேற்கொண்டுள்ளன.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரபல பொறியியல் கல்லூரிகள், பேராசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு வழங்கி வந்த ஊதிய உயர்வு, பிஎச்.டி., ஊக்கத் தொகை ஆகியவற்றை அதிரடியாக நிறுத்தியுள்ளன. மேலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த ஒவ்வொரு பேராசிரியரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகின்றனர். 
இதேபோல், 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கையைப் பெற்றுள்ள இரண்டாம் நிலைப் பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை பேராசிரியர்களின் ஊதியத்தை 40 சதவீதம் வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு, கோவை, சேலம் போன்ற பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அதிக ஊதியம் பெற்று வந்த துறைத் தலைவர், பேராசிரியர் பணியிடங்களில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், சில பொறியியல் கல்லூரிகள் 2 முதல் 5 மாணவர்கள் வரை சேர்க்கை பெறவைக்காத போராசிரியர்களை பணியில் இருந்து நீக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியது:
பொதுவாக, மாணவர் சேர்க்கை முடிந்து பருவத் தேர்வுக்கு இடைப்பட்ட காலங்களில் பேராசிரியர்களை பணியிலிருந்து நீக்கக் கூடாது. 
ஆனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், கல்லூரிகளுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அத்துடன், ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை 1:15 என்ற நிலையிலிருந்து 1:20 என்ற அளவில் ஏஐசிடிஇ குறைத்ததும் கல்லூரி நிர்வாகங்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
இருந்தபோதும், மாணவர் சேர்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் சில பொறியியல் கல்லூரிகள், 1:20 என்ற விகிதத்தையும் தாண்டி ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் சில பேராசிரியர்களுக்கு 2 முதல் 5 மாணவர்கள் வரை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, அந்த இலக்கை எட்டாத பேராசிரியர்களை வெளியேற்றி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனவே, கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை அண்ணா பல்கலைக்கழகமும், ஏஐசிடிஇ-யும் இணைந்து திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பொறியியல் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த முடியும் என்றார் அவர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, கல்லூரிகளில் திடீர் ஆய்வு நடத்தும் அளவுக்கு பல்கலைக்கழகத்தில் போதிய ஊழியர்கள் இல்லை. இருந்தபோதும் புகாரின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com