கடந்த இரு ஆண்டுகளில் ரூ.23,000 கோடிக்கு அரசு திட்டப் பணிகள் நிறைவேற்றம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கடந்த இரு ஆண்டுகளில் ரூ.23,000 கோடிக்கு அரசு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
கடந்த இரு ஆண்டுகளில் ரூ.23,000 கோடிக்கு அரசு திட்டப் பணிகள் நிறைவேற்றம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கடந்த இரு ஆண்டுகளில் ரூ.23,000 கோடிக்கு அரசு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
 காஞ்சிபுரத்தில் அதிமுக மேற்கு மாவட்டக் கிளை சார்பில் அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார். மாவட்ட எல்லையான படப்பையில் பூரண கும்ப மரியாதையுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் டோல்கேட் பகுதிகளில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அண்ணாவின் 110ஆவது பிறந்த நாளையொட்டி, சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அவரது நினைவு இல்லத்துக்கு முதல்வர் மாலை 4 மணிக்கு வருகை தந்தார். அங்கு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், காஞ்சிபுரம் ரங்கசாமி குளம், ஆட்சியர் அலுவலகம் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் கல்வெட்டைத் திறந்து வைத்தார்.
 இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேரடி ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின், அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ரூ.34.70 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுமக்கள் பல்நோக்கு கூட்டரங்கு உள்ளிட்ட 164 புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். அதுபோல், ரூ.70.64 கோடி மதிப்பீட்டில் 101 புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பேசியதாவது:
 காவிரிப் பிரச்னைக்கு தீர்வு, எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது, உதய் திட்டம், சிறுநகரங்களுக்கு விமானப் போக்குவரத்து, விவாயிகளுக்கு பல்வேறு மானியத் திட்டங்கள், நீர்நிலை பாதுகாப்புத் திட்டங்கள், சாலைகள், பாலங்கள் சீரமைப்பு, ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆளும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதோடு, வரும் ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்தல் முக்கியமான திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
 அவ்வகையில், மாவட்ட மக்களுக்கென கீழ்கதிர்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், 7 தடுப்பணைகளைக் கட்டுதல் ஆகிய திட்டங்களுக்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நல்லுறவு மையம் உள்பட 164 புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், அண்ணா புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு ரூ.23 கோடியில் நவீன சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கும் வகையில், செங்கல்பட்டு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவரச சிகிச்சை முன்னெடுப்புத் திட்டம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். குறிப்பாக சுகாதாரத் துறைக்கு மட்டும் ரூ.90 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவ்வகையில், வரும் 2030ஆம் ஆண்டில் தமிழக அரசு எட்டக் கூடிய சாதனைகளை, நடப்பு ஆண்டிலேயே படைத்து மாநில அரசு இமாலய சாதனை புரிந்துள்ளது.
 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே மிகச் சிறப்பான முறையில் தமிழகம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, தொடர்ந்து 3 முறை விருது பெற்று தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விபத்து நேரிடும் பகுதிகளுக்கு 11 நிமிடத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றடைந்தன. இந்த நேரம் தற்போது 8.33 நிமிடமாகக் குறைக்கப்பட்டு, சிறப்புடன் இச்சேவை செயல்படுகிறது. இதனால், இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு வருகிறது.
 மேலும், ரூ.393 கோடியில் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் வெள்ளத் தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்த விதத்திலும் வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் அதிமுக அரசு பொறுப்பேற்று இதுவரை ரூ.23 ஆயிரத்து 269 கோடியில் சுமார் 42 ஆயிரத்து 136 பணிகளை சிறப்பாகச் செய்து முடித்துள்ளது. மேலும், ரூ.19 ஆயிரத்து 103 கோடி மதிப்பீட்டில் 7,598 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார் எடப்பாடி பழனிசாமி.
 விழாவுக்கு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் முன்னிலை வகித்தார். ஆட்சியர் பா.பொன்னையா, தமிழக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை வரவேற்றுப் பேசினார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் நன்றியுரையாற்றினார். முதல்வரின் வருகையையொட்டி டிஐஜி தேன்மொழி, எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 இவ்விழாவில், காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் அமுதா, மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, முன்னாள் எம்எல்ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மைதிலி, அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com