அரசுப் பள்ளிகளை மூடினால் பாமக சார்பில் தீவிரப் போராட்டம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மூடினால் பாமக சார்பில் தீவிரப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார். 


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மூடினால் பாமக சார்பில் தீவிரப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார். 
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
மாநில வளர்ச்சிக்கான கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய முக்கியத் துறைகளை மேம்படுத்தாமல் தமிழக அரசு செயலிழந்துள்ளது. கல்வி சீர்திருத்தத்தையும் திரும்பப் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லை. 3 ஆயிரம் பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசுப் பள்ளிகளை மூடினால், பாமக தீவிரமாக போராட்டம் நடத்தும். உயர் கல்வித் துறையில் 4,247 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு தொடர்கிறது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரவிருப்பதால் இந்த மாத இறுதிக்குள் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநர் சட்ட ஆலோசனை நடத்துவதாகக் கூறி தாமதம் செய்யக் கூடாது. அக்.2-ஆம் தேதிக்குள் அவர்களை விடுவிக்க வேண்டும். 
கடந்த 50 நாள்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6.20, டீசல் ரூ.4.50 விலை அதிகரித்துள்ளது. ஆகவே, ஆந்திரம், கர்நாடகம் போன்று தமிழக அரசும் விலையை குறைக்க வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் வைத்து கொள்முதல் விலை ரூ.2,771 என அரசு நிர்ணயிக்க வேண்டும்.
வருகிற ஜன. 1 முதல் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதற்கு மாற்றாக துணிப் பை, பாக்கு மட்டை, வாழை மட்டை உள்ளிட்டவற்றை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். இதை காரணம் காட்டி பிளாஸ்டிக் தடையை தள்ளிப்போடக்கூடாது என்றார் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com