திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக குழப்பத்தை ஏற்படுத்த முடியாது

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிமுகவால் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக குழப்பத்தை ஏற்படுத்த முடியாது


திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிமுகவால் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் திமுக, காங்கிரஸை கண்டித்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 25-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு அளித்த உதவிகள் குறித்து முன்னாள் இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியதை வைத்து அதிமுக பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக கூறுகிறது. 
இலங்கை அதிபர் பொதுவாக கூறியதை மூடி மறைத்து இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ உதவி செய்ததாக கூறுவது தவறு ஆகும். கடந்த காலத்தில் இதே குற்றச்சாட்டை கூறியபோது அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, மாநிலங்களவையில், இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்த விதமான ராணுவ உதவியும் செய்யவில்லை. ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வழங்கியதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது' என்று தெளிவுபடுத்தினார். 
ஒப்பந்தம் மேற்கொண்டவர் ராஜீவ் காந்தி: இதற்குப் பிறகும் துரு பிடித்த வாதத்தை அதிமுக முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை தீர்க்க, இனக் கொடுமைகளுக்கு முடிவு காண இலங்கை அரசோடு ஒப்பந்தம் மேற்கொண்டவர் ராஜீவ் காந்தி. இத்தகைய உரிமைகளைப் பெற்றுத் தந்த ராஜீவ் காந்தி பயங்கரவாதிகளின் வன்முறைக்கு பலியாக்கப்பட்டதையும் இங்கு வருத்தத்தோடு கூற விரும்புகிறேன். 
ரூ.4,000 கோடியில் உதவி: இலங்கையில் 2009-இல் நடைபெற்ற போருக்குப் பிறகு தமிழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்ட போது, அன்றைய மன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி அரசு பல்வேறு மறுவாழ்வு நலத் திட்ட உதவிகளை ரூ.4,000 கோடி செலவில் செயல்படுத்தியது உள்பட பல்வேறு உதவிகளைச் செய்தது.
குறை கூறுவதற்கு... இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த சூழலில் அதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, ஒரு போர் என்று சொன்னால் அதிலே அப்பாவிகள் கொல்லப்படுவதும், பாதிக்கப்படுவதும் இயல்பானது தான்' என்று கூறியதை அதிமுகவினரால் மறுக்க முடியுமா ?. எனவே, திமுக, காங்கிரஸை குறை கூறுவதற்கு அதிமுகவுக்கு தகுதி இல்லை.
அதிமுகவினர் பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் காங்கிரஸ்- திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவர்களது நப்பாசை நிச்சயம் நிறைவேறாது என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com