ஸ்டெர்லைட் ஆலைக்கு பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்த நீதிபதி பேட்டி

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மையான மக்கள் மனு அளித்துள்ளதாக,
ஸ்டெர்லைட் ஆலைக்கு பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்த நீதிபதி பேட்டி

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மையான மக்கள் மனு அளித்துள்ளதாக, இதுகுறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் கூறினார்.
 ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மனுக்கள் வரை மனுக்களைப் பெற்றனர். அனைவரிடமும் தனித்தனியே மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
 போலீஸாரின் பலத்த சோதனைக்குப் பிறகே மனு அளிக்க அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். நிரந்தரமாக மூடக் கோரிக்கை: ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி எம்எல்ஏக்கள் தூத்துக்குடி கீதாஜீவன்(திமுக), ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன் (அதிமுக), காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் ஏபிசிவீ சண்முகம், மாநகரத் தலைவர் சி.எஸ். முரளிதரன், மதிமுக மாவட்டச் செயலர்கள் ஆர்.எஸ். ரமேஷ், புதுக்கோட்டை செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலர் கா.மை. அகமது இக்பால், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பாத்திமாபாபு, தெர்மல்ராஜா, குமரெட்டியாபுரம் மகேஷ் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
 ஆதரவாக மனு: இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஊழியர்கள், லாரி உரிமையாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஒப்பந்தாரர்கள் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அந்த ஆலையின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் மனு அளித்தனர்.
 தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அ. குமரெட்டியாபுரம் கிராமங்களைச் சேர்ந்த சிலர் அளித்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சுற்றுச்சூழலை சரியான முறையில் பராமரித்து வேலைவாய்ப்பு வழங்கி வந்தது. எனவே, மக்கள் நலனை கருதி ஆலையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆலைக்கு ஆதரவாக மனு அளிக்கப்பட்டது தெரிந்ததும் அதே பகுதியைச் சேர்ந்த பலர் அவர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியதைத் தொடர்ந்து போலீஸார் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
 "பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு': கருத்துக் கேட்புக் கூட்டம் முடிந்ததும் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் அளித்த பேட்டி:
 தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டோம். 2 ஆவது நாளாக ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், குமரெட்டியாபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினோம். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன.
 அதில், பெரும்பாலான மனுக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்றே வந்துள்ளன. இந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. விரைவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com