ஆளுநரைச் சந்தித்தார் அற்புதம்மாள்: மகனை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் திங்கள்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார்.
ஆளுநரைச் சந்தித்தார் அற்புதம்மாள்: மகனை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் திங்கள்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, ராஜீவ் கொலையில் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் உள்ள தனது மகனை தமிழக அமைச்சரவை முடிவின்படி விரைந்து விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட ராஜீவ் கொலை கைதிகள் ஏழு பேரையும் விரைந்து விடுவிக்க வேண்டுமென தமிழக அரசு முடிவு செய்து அது குறித்த தகவலையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது.
தமிழக அரசின் முடிவின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் 10 நிமிஷங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து அற்புதம்மாள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
உச்ச நீதிமன்ற முடிவுப்படி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இப்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பது அனைவருக்கும் தெரியும். நான் ஆளுநரைச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தனர். அவரை நேரில் சந்தித்தேன். என்னுடைய மனு முழுவதையும் அவர் படித்துப் பார்த்தார். மனுவில் என்னுடைய மகன் பரோலில் வந்தபோது எப்படி நடந்து கொண்டார். மேலும் ஒரு மாதம் பரோல் எப்படி கிடைத்தது என்று எழுதியிருந்தேன்.
மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன்...: மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி தாமஸ் தெரிவித்த கருத்து குறித்து தெரிவித்தேன். படுகொலை குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் எழுதிய புத்தகத்தை அளித்தேன். அதனை வாங்கி வைத்துக் கொண்டார். சிபிஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனின் பேச்சு குறித்த சிடியை அளித்தேன். வாங்கி வைத்துக்கொண்டு கவனிப்பதாக தெரிவித்தார். உடன் இருந்த மொழிபெயர்ப்பாளர் நான் தெரிவித்த அனைத்தையும் அவரிடம் தெரிவித்தார்.


உடனடியாக விடுவிக்க வேண்டுகோள்: நான் அளித்த கடிதம் முழுவதையும் படித்து பார்த்த பின்னர் அதில் உள்ள ஒன்றை கவனித்து திருத்தி அளிக்குமாறு தெரிவித்தார். நானும் திருத்தி அந்த மனுவை அளித்தேன். நான் அவரிடம் என் மகன் சீக்கிரம் வெளியே வர வேண்டும். உடனடியாக கையெழுத்துபோட்டு விடுதலை செய்ய வேண்டும்; அதற்காகத்தான் உங்களைச் சந்திக்க வந்தேன் என்று தெரிவித்தேன்.
நம்பிக்கை உள்ளது: சீக்கிரம் கவனிப்பதாக தெரிவித்தார்.
ஆளுநர் இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அற்புதம்மாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com