கூட்டுறவு சிறப்பங்காடிகளில் அத்தியாவசிய பொருள்களின் விலை 5% குறைவு

கூட்டுறவு சிறப்பங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து 5 சதவீதம் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக
கூட்டுறவு சிறப்பங்காடிகளில் அத்தியாவசிய பொருள்களின் விலை 5% குறைவு


கூட்டுறவு சிறப்பங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து 5 சதவீதம் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், தவறு செய்யும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
கூட்டுறவுத் துறையின் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது:-
நிகழாண்டில் பயிர்க்கடன் குறியீடாக ரூ.8,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 15 -ஆம் தேதி வரையில் 3.43 லட்சம் பேருக்கு ரூ.2,298.05 கோடி அளவுக்கு பயிர்க் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், தங்கு தடையின்றி உரம் கிடைக்கும் வகையில், 1.65 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
சிறு வணிகக் கடன்: கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, சிறு வணிகர்களுக்கான கடன்களையும் அளித்து வருகிறது. சுய உதவிக் குழு கடனாக 3.21 லட்சம் குழுக்களுக்கு ரூ.4,244.51 கோடியும், இதர கடன்களாக 2.79 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,161.91 கோடியும் அளிக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் எந்தவிதத் தங்கு தடையுமின்றி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். தவறு செய்யும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 75 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கடந்த 23 -ஆம் தேதி வரையில் 38,120 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.110.95 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 112 அம்மா மருந்தகங்கள், 170 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் அளிக்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும், குறைந்த விலையில் தரமான உள்ளூரில் தயாரிக்கப்படும் பொதுப் பெயர் கொண்ட மருந்துகள் (ஜென்ரிக்) விற்பனையை கூட்டுறவுத் துறை தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான மருந்தகங்களை தொடங்குவதற்கு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிறு சிறப்பங்காடிகள்: தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பாக, 100 சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை திறக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. 
இதுவரை 8 மாவட்டங்களில் 23 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் பொருள்கள் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து குறைந்தபட்சம் 5 சதவீதம் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ.
இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com