வரலாற்றுக் காலம் - 16

இங்கு காணப்பட்ட செங்கல் சுவற்றிலும், காரைப்பூச்சிலும் பலமுறை புனரமைப்பு செய்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.

 
(கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வின் தொடர்ச்சி)
அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதிகள்


இங்கு காணப்பட்ட செங்கல் சுவற்றிலும், காரைப்பூச்சிலும் பலமுறை புனரமைப்பு செய்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனை பலமுறை புனரமைப்புப் பணிகளை பார்த்துள்ளது என்பது தெளிவாகிறது. இந்தக் கட்டடத்தின் மையப் பகுதியின் நடுவில் ஒரு கருங்கல் பீடம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் மையப் பகுதியில் துளை ஒன்றும் காணப்படுகிறது. இதையடுத்து மேற்கொண்ட அகழாய்வுக் குழிகளில் ஏற்கெனவே வெளிக்கொணர்ந்த சுவற்றை ஒட்டியவாறு பல கட்டடப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டன. இங்கு ஒரு சுவற்றை அடுத்து மற்றொரு சுவர் இணையாகச் செல்வதை காணமுடிந்தது.
 
ஒரு சுவற்றின் தடிப்பு 1.10 மீட்டர் அளவிலும், 0.55 மீட்டர் இடைவெளி விடப்பட்டு மீண்டும் 1.10 மீட்டர் தடிப்புள்ள சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இடைவெளிப் பகுதியை மணல் இட்டு நிரப்பியுள்ளனர். இச்சுவற்றின் பகுதிகள், அடிப்பகுதி பெருத்தும் மேல் பகுதி சிறுத்தும் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சுவற்றின் தடிப்பு மாறுபடுகிறது.*1 இவை பின்னர் மாற்றி அமைக்கப்பட்டபோது ஏற்பட்டவை எனத் தெரிகிறது. இராஜேந்திர சோழன் மாளிகை பல அடுக்குமாடிகளைக் கொண்டிருந்தது என்பதற்கு அகழாய்வுகள் மூலம் வெளிக்கொணரப்பட்ட அடித்தள அமைப்பே சான்றாகும். இதன் மொத்தத் தடிப்பு 2.75 மீட்டர் ஆகும். எனவே, இக்கட்டடம் பல அடுக்குகளைத் தாங்கும் ஆற்றல் பெற்றது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. தஞ்சை பெரிய கோயிலிலும் இதே அடிப்படையில் இரட்டைச் சுவர் (Double Wall) அடித்தளம் அமைத்தல் முறையே பின்பற்றப்பட்டுள்ளது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம். இங்கு அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட செங்கல் சுவர்களில் பல்வேறுவிதமான அளவுகளில் பல்வேறு தடிப்பிலும், வெவ்வேறு கட்டுமானப் பிரிவிலும் காணப்படுவதால், இங்கு பல அடுக்குகளைக் கொண்ட கட்டடம் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.
 
 
அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட நீண்ட கட்டடப் பகுதிகள்
அகழாய்வில் நான்குவிதமான கட்டுமானங்கள் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், இங்கே கீழே சரிந்து விழுந்த கட்டடப் பகுதிகளையும், அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதிகளையும் சேர்த்து நான்குவிதமானவை உள்ளன என பகுத்துக் காணப்பட்டுள்ளது. அதற்குரியவற்றை தகுந்த சான்றுகளுடன் காண்போம்.
கட்டடப் பகுதி சுவற்றின் அமைப்பு - 1
அகழாய்வில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதி முழுவதும் தலைக்கல்லும் உடற்கல்லும் மாற்றி மாற்றி வைத்து கட்டப்பட்ட உள்கட்டமைப்பில் காணப்படும் சுவற்றின் கட்டுமானம் ஆகும். இது கங்கைகொண்ட சோழபுரம் முழுவதிலும் காணப்படும் சுவற்றின் அமைப்பை ஒத்துக் காணப்படுவதால், இது சோழர் காலக் கட்டடக் கலையின் கட்டுமானத்தை தெரிவிக்கும் சான்றாக அமைகிறது.
 
கட்டடப் பகுதி சுவற்றின் அமைப்பு - 2
அடுத்து காணப்படக்கூடியது 10 செ.மீ. தடிப்பில் காணப்பட்ட செங்கல் சுவர் அமைப்பு. இவ்வகை கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் அளவில் சிறியதாகவும் தட்டையாகவும் காணப்படுகின்றன. இவற்றை கிடைமட்டமாக வைத்து 3 செ.மீ. தடிப்பில் சுண்ணாம்புக்காரைக்கொண்டு பூசப்பட்டு இரண்டு பக்கமும் சமமான தரைதளம் போன்ற அமைப்பு காணப்படுவதால், இவை ஒரு கட்டடத்தின் விதானப்பகுதியாக இருத்தல் வேண்டும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் அடித்தளம் மிகவும் பெரிய அளவில் அமைந்துள்ளதால், இங்கு பல அடுக்குகள் கொண்ட கட்டடம் இருந்திருக்கலாம் என்றும், அதன் பகுதிகளே இந்தச் சிதைந்த சுவற்றின் பகுதி என்றும் கருதலாம்.
 
 
கட்டடப் பகுதி சுவற்றின் அமைப்பு - 3
இங்கு காணப்படும் சுவற்றின் தடிப்பு 50 செ.மீ. ஆக உள்ளது. இதன் ஒருபக்கம் நன்கு வழவழப்பாக காரைப்பூச்சு பூசப்பட்டு நன்கு மெருகேற்றப்பட்டு மின்னுகிறது. அடுத்த பகுதியில், கடினமான காரைப்பூச்சும் ஒழுங்கற்ற நிலையிலான காரைப்பூச்சும் பூசப்பட்டிருக்கிறது. இடைப்பகுதியில், கடினமான ஜல்லிக்கற்களும் கூழாங்கற்களும் மணலும் நிரப்பப்பட்டு மிகவும் கடினமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதை அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நன்கு தெளிவாகக் காணமுடிகிறது. இவை ஒரு அரண்மனையின் வெளிப்புறச் சுவரின் பகுதியாக இருக்கலாம்.
 
 
உடைந்துவிழுந்த கட்டடப் பகுதிகள் (விதானப் பகுதி - முதல்தளம்?)
கட்டடப் பகுதி சுவற்றின் அமைப்பு - 4
செம்புராங் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்ட நீண்ட ஒரு  கற்சுவர் கண்டறியப்பட்டது. இச்சுவற்றின் அமைப்பையும் கட்டுமானத்தையும் காணும்போது, இவை கோட்டையின் மதில் சுவர் என்பதை அறியமுடிகிறது. இச்சுவர் நான்கு பக்கமும் ஒரே சீராகச் செல்கிறது. குறுவாலப்பர் கோயிலில் காணப்படும் அகழியும், அதனைத் தொடர்ந்து மெய்க்காவல் புத்தார் வழியாக சுண்ணாம்புக்குழி சென்று பின்னர் கடாரங்கொண்டான் வழியாக ஆயுதக்களம் சென்று மேற்கே இடைக்கட்டு வழியாகச் சென்று முடிவடைகிறது.
 
அகழியின் தோற்றம்
அகழி, சதுர அமைப்பில் அமைந்துள்ளது. சில இடங்களில் அகழியின் பகுதிகள் காணப்பட்டாலும், முழுமையாகவும் தெளிவாகவும் இவை கோட்டை மதில் சுவர்தான் என்பதை பல அகழ்வுக்குழிகள் வாயிலாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொண்ட குழிகள் அனைத்திலும் உருண்டையான செம்புராங் கற்கள் கொண்டு மஞ்சள் நிறக் களிமண் கலந்து பூச்சு வேலையும் செய்யப்பட்டுள்ளதை அகழாய்வுகள் தெளிவாகச் சுட்டி நிற்கின்றன.
 
செம்புராங் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட கோட்டை மதில் சுவர்
 
2.5 மீட்டர் தடிமன் உள்ள கோட்டை மதில் சுவர்ப் பகுதி - இரண்டு பக்கமும் நன்கு செதுக்கப்பட்ட செம்புராங் கற்கள் கொண்டு கட்டப்பட்ட நிலை
கட்டட அமைப்பும் கட்டுமானமும்
மாளிகைமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள செங்கல் சுவர், அங்கு கிடைத்துள்ள தொல் பொருட்களின் அடிப்படையில் இக்கட்டட அடித்தளங்கள் சோழர் காலத்தவை என்பதில் ஜயமில்லை. மேலும், இங்கு செங்கற்கள் அடுக்கிக் கட்டிய முறை ஒரு குறிப்பிட்ட அறிவியல் முறையில் கட்டப்பட்டுள்ளன. அதாவது, முதல் வரிசையில் செங்கல்லின் உடல்பகுதி அதாவது நீள்வாக்கிலும், அடுத்து அடுக்கும்போது செங்கல்லின் தலைப்பகுதி முன்வருவதுபோல் குறுக்குவாக்கிலும் வைத்துக் கட்டியுள்ளனர். இதனை (Header and Stretcher method) உறுதித்தன்மை வாய்ந்த கட்டுமானம் என்பர்.*2
 
 
தலைப்பகுதியும் உடல்பகுதியும் தெரியும் நிலையில் செங்கற்கள் அடுக்கிவைத்துக் கட்டப்பட்ட கட்டுமான முறை – கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு
செங்கற்களை நீள்வாக்கில் அமைத்த ஒரு அடுக்கும், அதைத்தொடர்ந்து குறுக்குவாக்கில், அதாவது செங்கல்லின் தலைப்பகுதி ஒரு வரிசையும் அமைத்து கட்டுமானத்தை தொடர்வர். இதுபோன்று நீள்வாக்குப் பகுதியில் செங்கற்களை அமைத்துக் கட்டும், ஒரு தளம் முழுவதும் ஒரே அமைப்பில் நீளவாக்கில் அமைததுக்கொண்ட கட்டுமான முறையை நீள்வட்டச் செங்கல் அமைப்பு முறையை (Stretcher-bond) என்பர். இதன் அடிப்படையில்தான் கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனை முழுக் கட்டுமானமும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு காணப்படும் இச்சுவற்றின் இடையிடையே, அதாவது 1.70 மீட்டர் இடைவெளி விட்டு சதுரமான கருங்கல் ஒன்று வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அக்கருங்கல் பலகையின் மையப்பகுதியில் ஒரு அகன்ற துளை காணப்படுகிறது. கருங்கல் பலகை 65 X 30 X 30 செ.மீ. அளவில் காணப்படுகிறது. இங்கு சுமார் 500 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த இடத்திலிருந்து மட்டுமே 33 கற்பீடங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தக் கற்பீடங்களின் அமைப்பைக்கொண்டு, அதன் மேல் பகுதியில் தூண்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், உடைந்த நீள் உருண்டையான கற்தூணின் பகுதிகளும், மரத்தூண்கள் இருந்ததற்கான தடயங்களாக மக்கிய நிலையில் மரத்தூண்களின் பகுதிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக்கொண்டு, இப்பகுதி தூண்கள் நிறைந்த மண்டபமாக இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.*3 தூண்கள் நிறைந்த இம்மண்டபத்தில் மரத்தூண்களும், கற்தூண்களும் நிறைந்திருக்க வேண்டும்.
 
மரத்தூணின் மக்கிய நிலை
இங்கு வண்ணக்கலவை பூசப்பட்ட காரைப்பகுதிகள் கிடைத்துள்ளன. இதைவைத்து, இம்மண்டபம் வண்ணப்பூச்சுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கக்கூடும் என ஊகிக்கமுடிகிறது. பொதுவாக, இப்பகுதித் தூண்கள் நிறைந்த மண்டபமாக இருக்க வேண்டும். இங்கு காணப்பட்ட தொல்பொருட்கள் இக்கருத்தை வலுவூட்டுவதாகவே அமைந்துள்ளன. இராஜேந்திர சோழன் மாளிகைப் பகுதிகளின் மேல் கூரைப்பகுதிகளில் நீளமான தட்டையான ஓடுகள் வேயப்பட்டுள்ளன. இவ்வோடுகள் அடிப்பகுதியில் அரைவட்ட வடிவிலும், தலைப்பகுதி கொக்கி 'L' போன்ற அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை சங்க காலக் கூரை ஓடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. இந்த ஓடுகளை மரச்சட்டங்ளுடன் சுண்ணாம்புக்காரைகொண்டும் பூசுவர். அகழாய்வில் பல கூரை ஓடுகளும், உடைந்த கூரைப்பகுதிகள், கூரை ஓடுகள் ஒட்டிய நிலையிலும் கிடைத்துள்ளன.*4 இந்த வகைக் கூரை ஓடுகளை மரச்சட்டத்தின் மீது அப்படியே வைத்துப் பொருத்தி, அதன் மீது மேலும் ஒரு மரச்சட்டத்தை பொருத்தியிருக்க வேண்டும் அல்லது கூரை ஓடுகளை அடுக்கிய பிறகு அதன் மீது சுண்ணாம்புக்காரையைக்கொண்டு முழுவதும் பூசிக் கெட்டிப்படுத்தியுள்ளனர்.
தொல்பொருட்கள்
1. கூரை ஓடுகள் (Roofing tiles)
 
 
கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் அதிக அளவில் காணப்படும் தொல்பொருள் கூரைஓடுகள்தான். இவை நீள்செவ்வக வடிவில் தட்டையாக அமைந்து, அதன் தலைப்பகுதியில் கொக்கி போன்ற ஒரு அமைப்பும் காணப்படுகிறது. இதுபோன்ற கூரை ஓடுகள் அடிப்பகுதி அரைவட்ட வடிவிலும், முக்கோணவடிவில் அலங்கரித்த நிலையிலும், அறுகோணவடிவ நீள்தட்டையான அமைப்பும் குறிப்பிடத்தக்கது. சுண்ணாம்புக் காரைப்பூச்சுடன் கூடிய கூரை ஓடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதும், அவை பல்வேறு வடிவுகளிலும் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
2. இரும்பு ஆணிகள், இரும்புப் பட்டைகள், சிறிய மற்றும் பெரிய ஆணிகள், பிடிப்பு ஆணிகள் (Clamp)
 
 
கங்கைகொண்ட சோழபுரத்தில் இரும்பு ஆணிகள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 5 செ.மீ. ஆழம் தோண்டப்பட்டதும், அங்கே ஒரு கிலோ அளவில் இரும்பினால் ஆன நீண்ட சிறிய மற்றும் பிடிப்பு ஆணிகள், பிளேட்டுகள் (அலங்கரிக்கப்பட்டவை), செம்பினால் ஆன அலங்காரப் பட்டைகள் என பல்வேறுவிதமான தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. தோண்டத்தோண்ட, செங்கற்களும் கூரை ஓடுகளும், அதனுடன் பல்வேறுவிதமான இரும்பு ஆணிகளும் குவியத் தொடங்கின எனலாம். எனவே, இரும்பை அதிகமாகப் பயன்படுத்தியதையும் அதனைத் தொடர்ந்து மேல்தளங்களுக்கு வேய்வதற்குக் கூரைப்பகுதிகளில் நீள்தட்டையான ஓடுகளைப் பயன்படுத்தியுள்ளதையும் இவ்வகழாய்வு தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இவற்றில், துரு பிடித்து அழிந்தநிலையில் ஒருவகை இரும்பும், துரு பிடிக்காத இரும்புகளும் கலந்து காணப்பட்டன.
 
 
நீண்ட ஆணிகள், இரும்புப் பட்டைகள், பல்வேறு வடிவில் காணப்படும் கிளாம்ப் பட்டைகள் (Clamplates)
 
 
அகழாய்வில் கிடைத்த உயர்ரக இரும்பு ஆணிகள் (துரு பிடிக்காதவை)
இவற்றில் உயர்ரக இரும்பும், தரம் குறைந்த நிலையில் உள்ள இரும்புகளும் அடங்கும். இங்கு இரும்பு ஆணிகள் 5 செ.மீ. முதல் 55 செ.மீ. வரை நீளம் உள்ளவை கிடைத்துள்ளன. அதிகமான இரும்புப் பொருட்கள், குறிப்பாக ஆணிகள் கிடைத்ததால், இங்கு அதிக அளவில் மரக்கட்டைகளும், மர வேலைப்பாடுகளும் நிறைந்திருந்த மண்டபமாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.
3. தந்தத்தால் ஆன கலைப் பொருட்கள்
தந்தத்தால் செய்யப்பட்ட கலைப் பொருட்களாக சிம்மத்தின் பிடறி மற்றும் யானை போன்ற பல உருவங்கள் கிடைத்துள்ளன. இவை நாற்காலிகளிலும், கட்டில் போன்றவற்றிலும், பிற அரச சிம்மாசனத்திலும், இருக்கைகளிலும் பதிப்பதற்காகச் செய்யப்பட்டவைபோலத் தோன்றுகின்றன.
 
4. அலங்கரிக்கப்பட்ட எலும்புப் பொருட்கள்
இவ்வகை தொல்பொருட்களும், இருக்கைகளிலும் பிற மரப்பொருட்களில் பதிக்கவும் செய்யப்பட்டவை. இவற்றின் அடிப்படையில், இப்பகுதி அரண்மனை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியவருகிறது.
5. அலங்கரிக்கப்பட்ட கற்பொருட்கள்
 
 
கற்களால் பல வடிவங்களை உருவாக்கி, அவற்றை அரண்மனையின் பல பகுதிகளில் ஆங்காங்கே பதித்து அலங்காரம் செய்துள்ளனர். இவற்றில் சிங்கம் தன் குட்டிகளுடன் விளையாடுவதுபோன்றும், பிற வேடிக்கையான உருவ அமைப்புகளையும் செய்து ஆங்காங்கே பதித்துள்ளனர். வட்டவடிவில் கவிழ்த்துவைத்த தாமரைபோன்ற பூ வடிவமும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இதுபோன்று, அதிக அளவில் கற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் பல அகழாய்வில் சேகரிக்கப்பட்டன.
6. மணிகள் (கண்ணாடி மற்றும் கல்)
 
நீலநிறக் கண்ணாடி - மூலப்பொருள்
7. சங்கு வளையல்கள்
சங்கு வளையல்களும், சுடுமண் வளையல்களும், சங்குக் காதணிகளும், பிற கண்ணாடி வளையல்களும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. பெரும்பாலும், கருப்புநிற வளையல்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை, வளமையின் அடிப்படையில் பின்பற்றப்பட்டு வரும் சடங்கு அணிகளானாகும். கண்ணாடி மற்றும் கல்மணிகளும் இங்கு கிடைத்துள்ளன.
 
8. சுடுமண் குழல்
சுடுமண்ணால் ஆன நீண்ட வாயுடைய குழல் அமைப்பிலான குடுவையின் வாய்ப்பகுதிகள் பல சேகரிக்கப்பட்டன. இவற்றை விலை உயர்ந்த மதுபானங்களையும் அடைத்துவைக்கப் பயன்படுத்தியுள்ளனர். அயல்நாட்டினர் வருகை புரியும்போது அவர்களுக்கு விருந்து உபசரிக்கும் சமயம் மட்டுமே இக்குடுவையைப் பயன்படுத்துவர். இவை உயர்குடி மக்கள்  பயன்படுத்தும் மட்கலன் வகைகள் ஆகும். இவை பளபளப்பான சிவப்பு நிற மட்கலன்கள் (Red slipped ware) ஆகும்.
 
9. நீள்உருண்டையான கற்தூண்கள்
 
கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனை முழுவதும் கற்தூண்களையும் மரத்தூண்களையும் வைத்து அழகுபடுத்தியுள்ளனர். அவற்றில், மரத்தூண்கள் காலப்போக்கில் அழிந்து மக்கிப்போன நிலையில், துகள்களாக மட்டுமே காணக் கிடைக்கின்றன. மக்கிய நிலையில் மரத்துகள்களும் சில இடங்களில் சேகரிக்கப்பட்டன. அவற்றுடன், சிவப்பு நிற பளபளப்பான நீள்உருண்டையான கற்தூண்களின் உடைந்த பகுதிகளும் பல சேகரிக்கப்பட்டன. இவை, சிவப்பு நிற பளபளப்பான கற்தூண்கள் இங்கு இடம்பெற்றிருந்தன என்பதை நிரூபிக்கின்றன.
10. கெண்டி மூக்குகள்
கெண்டி எனப்படும் மட்கலன் வகையை புதிய கற்கால மக்களே முதலில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளனர். ஆனால், கெண்டி செம்பில் பல்வேறுவிதமான வளர்ச்சிகளுடன் அதிக அளவில் சோழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கு, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான அகழாய்வுகளில் கிடைத்த கெண்டி மட்கலன்களும், அவற்றின் உடைந்த மூக்குப் பகுதிகளும்   சான்றுகளாக உள்ளன.
கெண்டியின் மூக்கு முதலில் பானையுடன் இணைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் மூக்கு மட்டும் தனியாகச் செய்து அதை எல்லாவிதமான பானைகளிலும் தேவைக்கேற்ப வைத்துக்கொண்டனர். இந்த மூக்கின் பகுதியை ஏராளமான வேலைப்பாடுகளுடன் தயாரிக்கத் துவங்கினர். பின்னர், போர்ஸலைன் வகையிலும் தயாரித்து பயன்படுத்தத் துவங்கினர். எனவே நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது இக்கெண்டி மட்கலன். இவை மிகவும் பழமையானவை என்பதே உண்மை. இதன் அலங்கார உறுப்பாக கவிழ்த்துவைத்த தாமரை இதழ்கள் தொங்குவது போன்றும், வட்டமாகவும், இலைபோன்றும் பல்வேறு வடிவங்களைத் தங்களின் திறமைக்கு ஏற்ப வடிவமைத்துக்கொண்டனர்.
 
 
11. சுடுமண் காசு வார்ப்பு
சோழர்கள் ஆங்காங்கே அக்கசாலைகளை நிறுவி செம்பு, வெள்ளிக் காசுகளை அச்சிட்டனர். இவையனைத்தும் சுடுமண் காசு வார்ப்பு மூலம் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதியாகிறது. ஏனெனில், இக்காசு வார்ப்பில், காசுடன் உள்ள நிலையிலேயே வார்ப்புகள் பல கிடைத்துள்ளன. இதுபோன்ற முறையில்தான் காசுகள் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர் எனலாம். தமிழக அகழாய்வில், சோழர்கள் வாழ்விடங்களிலும் அக்கசாலைகள் இருந்த பகுதியில் நடைபெற்ற அகழாய்வுகளிலும் சுடுமண் காசு வார்ப்புகள் கிடைத்துள்ளன.
 
சுடுமண் காசு வார்ப்புகள்

மேற்கோள் சான்றாதாரங்கள்
1. S. Selvaraj, Excavations at Gangaikondacholapuram, Tamil Civilization, Quarterly research journal of the Tamil society, Thanjavur, 1987.
2. Ibid.,
3. Ibid.,
4. Ibid.,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com