டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் நூறு வயது!

இந்த ஆண்டு (2016) டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே பயன்பாட்டுக்கு வந்த நூறாவது ஆண்டாகும். டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே உருவாக்கப்பட்டது
டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் நூறு வயது!


இந்த ஆண்டு (2016) டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே பயன்பாட்டுக்கு வந்த நூறாவது ஆண்டாகும். இந்தியாவிற்குக் கடல் வழி கண்டறிந்தது, அமெரிக்காவைக் கண்டறிந்தது, சூயல் கால்வாய் வெட்டப்பட்டது போலவே டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே உருவாக்கப்பட்டதும் மிக முக்கியமான நிகழ்வாகும்!

இந்த ரயில்வே லைன் "ரஷ்யாவின் இரும்பு பெல்ட்' (IRON BELT OF RUSSIA) என்று அழைக்கப்படுகிறது. ரஷ்யாவை ஆண்ட ஜார்ஜ் மன்னர் இரண்டாம் நிகோலஸ் (TSAR NICHOLAS-II) ரஷ்யாவின் மேற்கு எல்லையிலிருந்து கிழக்குக் கோடி வரை ஜார் மன்னர்கள் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிரத்யேகமாகப் பயணிக்க "ஜார் டிரெயின் சேவை' ஒன்றைத் துவக்க விரும்பினார். ஏனெனில் பெரும்பாலான ரஷ்யர்கள் தங்கள் நாட்டின் கிழக்கு எல்லைக்கு வந்ததே இல்லை! கிழக்கில் வசிப்போர் மேற்கு எல்லைக்கு வந்ததே இல்லை!
 காரணம்...,அதன் நீண்ட தொலைவுதான்!


 அதையும்விட மிக முக்கிய காரணம் ஒன்று இருந்தது! ஜப்பான், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆசியாவை ஒட்டி இருந்த ரஷ்யப் பகுதியை ஆக்கிரமிக்க விரும்பின! எனவே ரஷ்யா ரயில்வே லைன் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! எனவே ரஷ்யப் புவியியல் கூறுகள் அனைத்தும் சர்வே செய்யப்பட்டன.

பிறகு 9-7-1891 ஆம் ஆண்டு ரயில்வே லைன் அமைக்கும் பணி துவங்கப்பட்டது! மாஸ்கோவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் ஆரம்பித்து மேற்கிலிருந்து கிழக்கில் ஒரு கட்டுமானமும், "விளாடிவாஸ்டாக்'கில் இருந்து "கிழக்கிலிருந்து மேற்கு' நோக்கி ஒரு கட்டுமானமும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.

ஜார் அரசர் இரண்டாம் நிகோலஸ் அமெரிக்க, மற்றும் இத்தாலி பொறியியல் வல்லுனர்களின் உதவியைக் கோரினார். எண்ணிலடங்கா சிறைக்கைதிகள், மற்றும் உள்ளூர் மக்கள் இம்மாபெரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான "பைகால்' ஏரியைத் தாண்டி இருப்புப் பாதை அமைப்பது மிகப் பெரும் சவாலாக இருந்தது! ஏனெனில் இது 636 கிலோ மீட்டர் நீளமும் கி.மீ 744மீ ஆழமும் கொண்ட மிகப் பெரிய ஏரியாகும். இந்த ஏரியைச் சுற்றி இருப்புப்பாதை அமைத்தல் என்பது மிகவும் கடினமாகும். எனவே அதிகாரிகள் மற்றொரு யோசனையை செயல்படுத்தினர். ஃபெர்ரீஸ் (FERRIES) எனப்படும் பனியில் செல்லும் படகில் ரயில் பெட்டிகளுடன் மக்களையும் ஏற்றிக் கொண்டு ஏரியின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்வதுதான் அது! கடினமான பனிக்கட்டிகளைக் கூட உடைத்துச் செல்லும் இத்தகைய படகுகள் கடும்பனிக்காலத்தில் (PERMA FROST) காலத்தில் உறைந்து போயின.

எனவே வடகிழக்குச் சைனாவின் மன்சூரியாவில் இருந்து விளாடிவாஸ்டாக்கை அடையும் மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்தனர். மன்சூரியாவில் உள்ள "ஹார்பின்' என்ற நகரத்தின் வழியாக இந்த ரயில் சேவை தொடரப்பட்டது. இந்த ரயில் சேவையின் கட்டுமானம் 1901ஆம் ஆண்டு நிறைவுற்றது.

1904ஆம் ஆண்டு ரஷ்ய ஜப்பானியப் போர் துவங்கும் வரை அனைத்தும் சுமுகமாய் இருந்தன. போர் தொடங்கிய அடுத்த நிமிடமே மன்சூரிய இருப்புப் பாதையின் தடம் ஜப்பானியர்களால் சேதப்படுத்தப்படும் என்பதை ரஷ்ய அரசு தெரிந்து கொண்டது.

எனவே பைகால் ஏரியைச் சுற்றி இருப்புப்பாதை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. உலகக் கட்டுமான வரலாற்றிலேயே சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக அதிக மக்களை பலியாகக் கொண்டது இந்தப் பணியாகத்தான் இருக்கும்! இந்தக் கட்டுமானத்தில் எத்தனை பேர் பங்கு கொண்டனர் என்பதும் எத்தனை பேர் பலியாயினர் என்பதும் பதிவு செய்யப்படவில்லை! காரணம்...,அத்தனை பேரும் சிறைக்கைதிகள்...,மற்றும் நாடு கடத்தப்பட்டோர் என்பதுதான்!

அட்டைப் பூச்சிகள், கொசுக்கள், வனவிலங்குகள், கடும் குளிர் ஆகிய அனைத்தையும் எதிர் கொண்டு அவர்கள் 33 குகை வழிகளையும் (TUNNELS) 200 பாலங்களையும் அமைத்தனர். இந்த வழித்தடப் பணிகள் 1905ஆம் ஆண்டு நிறைவு பெற்றன. இன்றும் கூட மனிதக் கட்டுமானத்தில் பைகால் ஏரியைச் சுற்றுயுள்ள இந்த வழித்தடம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகும்! (MOST COMPLICATED DUE TO INHOSPITABLE TERRAIN) ரஷ்யப் பொறியியல் வல்லுனர்களுக்கு அடுத்த சவால் "ஆமுர்' நதி (AMUR RIVER) வடிவில் வந்தது. அந்நதியின் மேல் பாலம் அமைக்கும் பணி 1908ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உயரம் 79அடிகள் ஆகும்! மொத்தம் நீளம் 4709 அடிகள். எத்தனையோ இடர்பாடுகளையும், உயிர் பலிகளையும் தாண்டி 1916ஆம் ஆண்டு இப்பணி முழுமையடைந்தது!

1916ஆம் ஆண்டு ஆக்டோபர் 5ஆம் நாள் ஜார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் இந்த வழித்தடத்தை முறைப்படி திறந்து வைத்தார். இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா?

 ரஷ்யா கம்யூனிஸ்டுகள் வசம் வந்த பிறகு இதே வழித்தடத்திலேயே, இதே சைபீரியன் ரயிலிலேயே அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டார்!

டிரான்ஸ் சைபீரியன் ரயில் இறுதியாக நிற்கும் இடம் "விளாடிவாஸ்டாக்' ஆகும்! ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுகமும் இதுவே!


 இந்த ரயில்கள் 485 பாலங்களையும், 33 குகைப்பாதைகளையும் கடந்து செல்கின்றன! ஆசியாவையும் ஐரோப்பாவையும் தரை வழியாக இணைக்கும் ஒரே கருவி டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே ஆகும்.


 மாஸ்கோவில் தொடங்கி விளாடிவாஸ்டாக் வரை உள்ள மொத்த தூரம் 9288 கிலோ மீட்டர்கள் ஆகும்! மொத்தப் பயண நாட்கள் 7 ஆகும்!


 இந்த ரயில் கடந்து செல்லும் ஆமுர் நதிப் பாலம் உலகிலேயே இரண்டாவது நீளமான பாலம் ஆகும்! முதலாம் இடத்தைப் பெறுவது மிசிசிபி நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.


 இதன் வழியில் உலகின் மிக நீளமான குகைப் பாதை ஒன்று உள்ளது. இதன் நீளம் 2.3கி.மீ ஆகும் மற்ற 32 குகைப்பாதைகளைவிட இதுவே மிக நீளமானதாகும்.

"ஸ்லட்யன்கா'(SLUDYANKA) என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையம் முழுக்க முழுக்க சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது!

 இந்த ரயில் எட்டு நேரப் பகுதிகளைக் கடந்து செல்கிறது! (8 DIFFERENT TIME ZONE) கடந்து செல்கிறது!

 இது 19% ஐரோப்பாவிலும் 81% ஆசியாவிலும் பயணிக்கிறது! 87 பெருநகரங்களையும், 96சிற்றூர்களையும் கடந்து செல்கிறது!

 இந்த ரயில் செல்லும் பாதையில் 16 பெரிய ஆறுகள் குறுக்கிடுகின்றன!

 இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்! வெளியில் மைனஸ் 20 டிகிரி சி. வெப்பநிலை இருக்கும்போது நயிலின் உள்வெப்பநிலை 25டிகிரி சி. வெப்ப நிலையாக இருக்கும். தானியங்கி இயந்திரங்களால் இது சரி செய்யப்படுகிறது!
 மாஸ்கோவில் தொடங்கி விளாடிவாஸ்டாக் செல்வது வரை இந்தத் தொடர் வண்டி 64 ரயில் நிலையங்களில் நிற்கும்!

ரஷ்யாவின் பொருளாதாரத்தில் டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே முக்கிய பங்காற்றுகிறது! ஆண்டொன்றுக்கு 20,000 சரக்குப் பெட்டகங்கள் இந்த ரயில்வே மூலம் கையாளப்படுகின்றன! இந்த ரயில்வே மிக முக்கயமான சுற்றுலாத் தலமாகும்!
 இந்த ரயில்வே வழித்தடம் சீனப்பெருஞ்சுவரை விடவும், அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலையை விடவும் (U S ROUTE 66) மிக நீளமானது!
 இந்த ரயில் சேவை டிரான்ஸ்-மங்கோலியன், டிரான்ஸ்-மன்சூரியன், டிரான்ஸ்-சைபீரியன் என மூன்று வழித்தடங்களில் செயல்படுகிறது! இவற்றுள் டிரான்ஸ்-சைபீரியன் மட்டுமே முழுக்க முழுக்க ரஷ்ய மண்ணில் செயல்படும் சேவை ஆகும்!

இந்த வழித்தடம் முழுவதையும் மின்சாரமயமாக்க 74 ஆண்டுகள் பிடித்தன! இந்த ரயில் வழித்தடம் கட்டுமானம் தொடங்கி பயன்பாட்டிற்கு வர 25 ஆண்டுகள் ஆகியுள்ளன!


 இதன் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அக்டோபர் மாதம் சிறப்பு தபால் தலை ஒன்றும், சிறப்பு சொகுசு ரயில் ஒன்றும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது ரஷ்ய அரசு!
 
 தொகுப்பு: என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
 கடுவெளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com