பூமியைத் தாக்கிய காஸ்மிக் கதிர்கள்!

பூமியை காஸ்மிக் கதிர்கள் தாக்கியதால் சுமார் 2 மணி நேரத்திற்கு புவி காந்த புலம் தனது காந்த சக்தியை இழந்துள்ளது.
பூமியைத் தாக்கிய காஸ்மிக் கதிர்கள்!

பூமியை காஸ்மிக் கதிர்கள் தாக்கியதால் சுமார் 2 மணி நேரத்திற்கு புவி காந்த புலம் தனது காந்த சக்தியை இழந்துள்ளது. இந்த நிகழ்வு வட அமெரிக்காவில் நிகழ்ந்தாலும் உதகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 நீலகிரி மாவட்டத்தில் உதகை முத்தோரை பகுதியில் காஸ்மிக் கதிர்கள் ஆய்வகம் இயங்கி வருகிறது. இந்த ஆய்வகம் காஸ்மிக் கதிர்கள் ஆய்வில் சர்வதேச அளவில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி ஏற்பட்ட சூரிய புயலால் பூமியின் காந்த புலம் சுமார் 2 மணி நேரம் பலவீனமடைந்ததை இந்த ஆய்வகம் கண்டறிந்தது.
இதுகுறித்து சர்வதேச அறிவியல் அமைப்புக்கு தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருந்த நிலையில், இந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்து சூரிய புயலால் பூமியின் காந்தப் புலம் பலவீனமடைந்ததை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இது குறித்து சர்வதேச அறிவியல் இதழான Physical Review Letter  - இல் இதை அதிகாரப்பூர்வமாக கடந்த மாதம் 21ஆம் தேதி அறிவித்தது.
இது தொடர்பாக ஆய்வகத்தின் தலைமையிடமான புனேயிலிருந்து உதகையிலிருந்த செய்தியாளர்களிடம் அதன் தலைவர் எஸ்.கே.குப்தா பேசியதாவது: 

"உதகையிலுள்ள காஸ்மிக் கதிர்கள் ஆய்வகத்தில் காஸ்மிக் கதிர்களின் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். காஸ்மிக் கதிர்கள் ஒரே அளவில்தான் (2 நானோ டெஸ்லா)  உலகம் முழுவதும் பதிவாகும். இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதம் 22ஆம்தேதி நள்ளிரவில் இந்த அளவு 40 நானோ டெஸ்லாவாக பதிவானது. இது சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது.
 சூரியனிலிருந்து வெளியேறிய பொருட்கள் மணிக்கு 2.5 மில்லியன் கி.மீ. வேகத்தில் பூமியை மோதியதால், பூமியின் காந்தப் புலம் பலவீனமடைந்தது. இதன் பாதிப்பு வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய பகுதிகளில் இருந்துள்ளது. ஆனால் இதன் பாதிப்பு குறித்து உதகை காஸ்மிக் கதிர்கள் ஆய்வகத்தில்தான் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த எங்கள் முறையான  ஆய்வறிக்கையை சர்வதேச அறிவியல் அமைப்பு கடந்த மாதம் 21 ஆம் தேதி இந்த ஆய்வை 
சர்வதேச அறிவியல் அமைப்பு உறுதி செய்தது.
சூரியனிலிருந்து தொடர்ந்து பொருட்கள் வெளியேறி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம்தேதி ஏற்பட்ட புயல் மிகவும் கடுமையாக இருந்ததால், பூமியின் காந்தப் புலத்தை அது பாதித்தது. இதனால் காந்தப் புலம் பலவீனமடைந்த போதிலும், எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சூரிய புயல் தொடர்ந்து ஏற்பட்டு வருவதோடு, இயற்கையாகவே நிகழ்வதால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், இது குறித்து முன்னதாகவே அறிய தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்குரிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால் சூரியப் புயல் ஏற்படுவதை முன்கூட்டியே அறிய முடியும்'' என்றார்.
 இதுதொடர்பாக உதகை காஸ்மிக் ஆய்வக விஞ்ஞானி அதுல் ஜெயின் கூறும் போது, "உதகையில் உலகின் பெரிய மியான் தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளதால் ஆய்வில் துல்லியத் தன்மை அதிகரித்துள்ளது. இதனால், சூரிய புயலால் பூமியின் காந்த புலம் பலவீனமடைந்தது உதகையில் கண்டறியப்பட்டது. எங்களது அமைப்புக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் எங்களாலேயே வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. புயல் போன்றவை மட்டுமல்ல,  இயற்கை சீற்றங்கள் குறித்த கண்டுபிடிப்புகளை  விண்வெளி ஆராய்ச்சிக்கும் இந்த ஆய்வகம் அளித்து உதவுகிறது.  25,000 சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள 400 பிளாஸ்டிக் சின்டிலேடர் கதிர் கண்டறியும் கருவிகள் மற்றும் 3,712 மியான் கண்டறியும் கருவிகள் அடங்கிய தொலைநோக்கிகளுக்கான தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் ஆய்வகத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.
 தற்போது 3,726 மியான் கண்டறியும் கருவிகளைக் கொண்டு கூடுதலாக ஒரு தொலை நோக்கி நிறுவப்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் 1,248 தனி கணினிகள் திறன் கொண்ட 600 டி.பி திறன் கொண்ட சூப்பர் கணினி இங்கேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணினி தொகுப்பு உலகளவில் 42ஆவது அதிவேகமானது.
 காஸ்மிக் கதிர்கள் அதிக சக்தியுடைய கதிர்கள் என்பதால், நாள்தோறும் அனைத்து திசைகளிலிருந்தும் தொடர்ந்து 24 மணி நேரம் சிக்னல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்காக துல்லியமாக கணிக்கும் உபகரணங்கள் இங்கேயே வடிவமைக்கப்படுவதால் அவற்றின் செலவு பெருமளவு குறைகிறது. மேலும், பழுது ஏற்பட்டாலும் சரி செய்ய முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆய்வுக்கான கண்டறியும் கருவிகள், கணினி உபகரணங்கள், கணினி மென் பொருட்கள் போன்றவற்றை நாங்களே தயாரித்துக் கொள்கிறோம்'' என்றார் அவர்.
 சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற இம்மையத்தில் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகம், டோக்கியோ தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஜப்பான் தேசிய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவையும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றன. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அறிவியல் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 
-ஏ.பேட்ரிக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com