தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!

ராமமூர்த்தி ஐயர் ஒரு சிறந்த புரோகிதர். தனது 92ஆவது வயதில் (2010இல்) காலமானார்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!

ராமமூர்த்தி ஐயர் ஒரு சிறந்த புரோகிதர். தனது 92ஆவது வயதில் (2010இல்) காலமானார். தனது குடும்பத்தைப் பாதுகாத்து வாழ்வளித்த இந்த
தமிழ்நாட்டிற்கும், அதில் உள்ள மக்களுக்கும், தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். இவரது மகன் ஆர்.காமகோடியிடம், "நமது மதம் கூறும்
நல்ல விஷயங்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். அது தான் என்னுடைய லட்சியம்'' என்றும் கூறினார். தன் கடைசி காலத்தில் அவராகவே முடிவு
செய்து ஒரு பாடசாலையும், ஒரு பசுமடமும் உருவாக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை பிள்ளையான காமகோடியிடம் கூற, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார் மகன் காமகோடி .

செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள ஆத்தூரில், 12 கிரெளண்ட் நிலம் வாங்கினார். ஆனால் தந்தை அந்த பாடசாலையையும், பசுமடத்தையும் பார்க்க
முடியவில்லை. தந்தையின் நினைவாக அவரது சொல்லை மந்திரம் போல் ஏற்று, இன்று பசுமடத்தையும் பாடசாலையையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் புகழ்பெற்ற ஐப கம்பெனியின் உப தலைவராக இருக்கும் காமகோடி.

"என் தந்தையின் சொற்களே எனக்கு வேத வாக்கு. என்னிடம் உள்ள பணம் முழுவதையும் கொடுத்து, இந்த இடத்தை முதலில் வாங்கினேன். பின் ஒரு வேத பாடசாலையும், பசுமடத்தையும் உருவாக்க முனைந்தேன். முதன் முதலில் நாங்கள் வாங்கியது ராஜேஸ்வரி என்ற பெயருள்ள ஒரு பசு மாடுதான். நாங்கள்
வாங்கும்போது அது கர்ப்பமாக இருந்தது. பிறந்த கன்றுக்குட்டிக்கு நாங்கள் வைத்த பெயர் மீனாக்ஷி. அந்த குட்டிக்கு ஒரு குட்டி பிறந்திருக்கிறது. அதன் பெயர் ஸ்ருதி. இப்படி எங்களிடம் இன்று 25 பசுக்கள் உள்ளன. அவற்றிலிருந்து கறக்கப்படும் பாலை பக்கத்திலுள்ள கோயில்களுக்கு அபிஷேகம் செய்ய
அனுப்புகிறோம். வேத பாடசாலையில் 43 குழந்தைகள் இங்கேயே தங்கி வேதங்களை கற்று வருகிறார்கள். அவர்களுக்கு உணவு உடை, உறையுள்
இம்மூன்றையும் நாங்கள் அளித்து அவர்களை நன்கு படிக்க வைத்து. காஞ்சி மடம் நடத்தும் தேர்வு எழுத வைக்கிறோம்.

இதில் உள்ள சிறப்பு என்ன வென்றால் ஒரு மாதத்திற்கு ஒரு பசுவிற்கு 2500 ரூபாய் எங்களுக்குச் செலவாகிறது. எங்களிடம் உள்ள பசுக்கள் எல்லாமே உயர்ந்தரக பசுக்கள். அவைகள் தார் பார்கர், சிந்தி, சாகிவால், கிர், ஒங்கோல் ஆகியவை. இவை  ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டவை. பால் மட்டும் அல்லாமல் கோ காஸ், வரட்டி, விபூதி ஆகியனவும் எங்களுக்கு கிடைக்கின்றன. இந்த பசுக்களுக்கு தினமும் கோ பூஜையும் செய்கிறோம். ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று விசேஷ பூஜை இங்கு நடத்தப்படுகிறது.

வேத பாடசாலையில் இருக்கும் குழந்தைகளுக்கு வேதம் கற்றுத் தருவதோடு, ஆங்கிலம், கணக்கு, சமஸ்கிருதம் ஆகியவைகளும் அவர்களுக்கு சொல்லிக்
கொடுத்து, அவர்களை தங்கள் சொந்தக் காலிலேயே நிற்கச் செய்கிறோம். இந்த குழந்தைகள் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள். சுக்ல யஜுர் வேதம், கன்வசாக ஆகிய இரண்டும் தமிழ் நாட்டில், எங்கள் பாடசாலையில் மட்டும்தான் கற்பிக்கப்படுகிறது என்று நான்  நினைக்கின்றேன். ஏனெனில் இவை இரண்டும் வட இந்தியாவில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். 

நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு மூன்று பாடசாலைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறோம். மூடும் நிலையில் இருந்த அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவி செய்து தொடர்ந்து நடத்திக் கொள்ள வழிவகை செய்து இருக்கிறோம். இவை எல்லாவற்றிற்குமே நான் என்னுடைய பணம் மட்டுமேதான் அளித்தேன் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. மக்களிடமிருந்து, குறிப்பாக நல்ல உள்ளங்களிடமிருந்து வரும் பொருள் உதவியினால்தான் எங்களால் இந்த அளவிற்கு ஒரு பாடசாலையையும் பசுமடத்தையும் நடத்தும் அளவிற்கு உயர முடிந்திருக்கிறது என்றால் அது மிகை இல்லை. காரணம், இங்கு எல்லாமே இலவசம்.

எதற்கும் நாங்கள் காசு வாங்குவதில்லை. அதனால்தான் நாங்கள் கோதானம் செய்வதைவிட, கோ சம்ரக்ஷணம் செய்யச் சொல்கிறோம்'' என்றார் காமகோடி.
-சலன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com