ஆனந்தரங்கர் - தமிழரின் முன்னோடி

ஆனந்தரங்கர் - தமிழரின் முன்னோடி

சென்னையைச் சேர்ந்தவர் ஆனந்தரங்கர். புதுவை ஆட்சியாளருக்குத் தேவைப்பட்ட மொழிபெயர்ப்புப் பணியில் பங்காற்றினார். அவருடைய நாட்குறிப்புச் செய்திகளில் மொழி வரலாறு, இன வரலாறு, அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு

இலக்கியவுலகில் நூலாக்கியோர், உரை வழங்கியோர், மதிப்பீடு தந்தோர் போன்றவர்களின் பெயர்கள் அடுக்கிக் காட்டப்பெறும். ஆனால், தானெழுதிய நாட்குறிப்பு ஓர் இலக்கியப் பனுவலாகக் கருதப்பெறும் என நினைத்துக் கூடப் பார்க்காத ஒருவரின் பெயரைத் தமிழ் இலக்கிய வரலாறு அழுத்தங்காட்டிக் குறித்துக் காட்டும்.

ஏனெனில் அது பார்வையாளர் ஒருவரால் தீட்டப்படவில்லை. 

பங்கேற்பாளர் ஒருவரால் வரையப்பட்டது.

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்தம் வாழ்வியலைச் சித்திரிக்கும் அந்த நாட்குறிப்பின் பெயரே சற்று மாறுபட்டது. அந்தப் பெயர் பிரத்யேகமான ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் தினப்படிச் செய்திக்குறிப்பு என்பதாம். இந்தத் தலைப்பு மொழிவதைப் போல் ஒரு தனிமனிதரான ஆனந்தரங்கர் என்பவரின் தனிப்பட்ட நாட்குறிப்பு அது. இதில் வேடிக்கை என்னவென்றால், நாள்தோறும் இந்நாட்குறிப்பு எழுதப்படவில்லை. இடைவெளிகள் நிறைய நிறைய உள்ளன. எனினும் புதுவையில் வாழ்ந்த அன்றைய தமிழர் தம் வாழ்வியலைப் படம் பிடிக்கிறது.

பிரஞ்சு அரசில் துவிபாசி (துபாஷி) என்பது முதன்மைத்துவம் கொண்ட ஒரு பதவி. துவிபாசி என்பதற்கு இருமொழி வல்லார் என்பது நேர்முகமான தமிழ்ப் பெயர்ப்பாகலாம். ஆளுவோருக்குத் தமிழும் மக்களில் பலருக்குப் பிரஞ்சும் தெரியாத காலகட்டத்தில் இருதரப்பாருக்குமான பாலமாக அமைபவரே இவ்வாறான இருமொழித் திறனி. அந்த பதவியை வகித்த ஆனந்தரங்கர் தமிழ், தெலுங்கு, பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை ஓதியுணர்ந்தவர். 

சென்னையைச் சேர்ந்தவர் ஆனந்தரங்கர். புதுவை ஆட்சியாளருக்குத் தேவைப்பட்ட மொழிபெயர்ப்புப் பணியில் பங்காற்றினார். அவருடைய நாட்குறிப்புச் செய்திகளில் மொழி வரலாறு, இன வரலாறு, அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு போன்றவை படிந்துள்ளன. ஒரு தமிழரை நாட்குறிப்பு வேந்தர் எனப் பாருலகு பாராட்டுகின்றதென்றால், அவர் ஆனந்தரங்கர் மட்டுமே. தமிழர்க்கு வரலாற்றைப் பதிவு செய்யும் பழக்கமில்லை என்ற வசையை நீக்கியது அவரின் எழுத்தாவணம். அஃது ஓர் அரசுக் குறிப்பேடும் இல்லை. தனிமனிதச் செய்திகளைச் செப்பும் தகவலேடும் இல்லை. 

அவரைப்பற்றிக் கவியோகி சுத்தானந்த பாரதி குறிப்பிடும் போது "புதுவை தந்த புதையல்' எனப் போற்றுவது குறிக்கத்தக்கது.

தன் தாய்மொழியாகிய தமிழைப் பேசுவோர்க்காக உரிய முறையில் தான் வகித்த பதவியை அளவோடு பயன்படுத்தியவரே ஆனந்தரங்கர். புதுவையை நோக்கிப் பல திசைகளிலிருந்து பகைக் கணைகள் புறப்பட்ட சூழலில் மக்களெல்லாம் தம் இல்லங்களிலிருந்து நெல் மூட்டைகளைப் போர் மறவர் பாசறைக்கு அனுப்புமாறு அரசு ஆணையிட்டது. தமிழர்கள் அவ்வாறே வினையாற்றினர். ஆனால் வம்புப் பேச்சுக்கு அடிமைபட்ட ஆளுநர் ஆனந்தரங்கரை அழைத்துத் தமிழ் மக்களைப் பழித்துப் பேசியும் தமிழர்கள் கோழைகளென இழித்துக் கூறியும் சினப்பட்டார். 

புதுவையில் ஆளுநர் துப்ளெக்சு, தமிழரை ஏசியதைக் கண்ட ஆனந்தரங்கர், "நான் ஒரு தமிழன் மட்டுமில்லை: தமிழ் மக்களின் தோழனுமாவேன்'' என நின்றிருக்கிறார். அவர் எழுதியவை வருமாறு: 
"தமிழர்களைச் சொல்கிறீர்களே... எந்த வெள்ளைக்காரன் இந்தச் சமயத்தில் உதவினான். ஒரு நியாயத்திற்குத் தமிழர் உதவினாற் போல் வேறு எந்த இனத்தார் உதவினர்? முற்றுகையின் போது நாளொன்றுக்கு 5 கரிசை நெல் வீதம், இரண்டு மாதம் முற்றுகையில் 300 கரிசை நெல் அளக்கவில்லையா...?
தமிழர் எதுக்கும் சாய்த்து கொடுக்கிறது போலேயும் அவனுடைய உதவியைப் போலே மற்றபேர் உதவியில்லை' அக்காலத்திய தமிழ் நடையின் அகல நீளத்தை இவைபோன்ற வரிகள் உணர்த்தும்.

ஒரு நாட்டின் படை மற்றொரு நாட்டின் ஒரு பகுதியை வெல்லுதல் என்பது இயல்பானது. ஆனால் வென்ற ஊரை அல்லது நகரைப் பிறருக்கு விற்றிருப்பதாக எங்காவது செய்திகள் உண்டா? நாட்குறிப்பு முன் நிறுத்தும் ஒரு செய்தி வருமாறு: "புதுவைப் பரப்பை ஆண்ட ஆளுநரான துப்ளெக்சு தன்னுடைய படைப்பிரிவுத் தலைவனான இலபூர்தொனே என்பாரின் உதவியுடன் சென்னையைப் பிடித்தார். 

கைப்பற்றப்பட்ட சென்னையை ஆங்கிலேயரிடமே பெருந்தொகைக்கு விற்கிறான் இலபூர்தொனே. இதனைப் பொறுக்காத ஆளுநர் வேறுபடையின் உதவியுடன் சென்னையை மீண்டும் வெற்றி கண்டு ஆங்கிலக் கம்பெனியாரின் செல்வத்தைக் கவர்ந்து கொண்டார்'.

ஆனந்தரங்கர் வகுத்துத் தந்த பல வியூகங்கள் பல போர்களில் பயன் தந்தன. இரண்டாவது கருநாடகப்போரில் (1749 - 1754) ஆற்காட்டின் நவாப்பான சந்தாசாகிப்பிற்குத் துப்ளெக்சு உதவுகிறார். 

வெற்றியீட்டுகிறார். இவ்வுதவிக்கு நன்றி காட்டும் முகமாகப் பாகூர், வில்லியனூர் போன்ற பகுதிகளைப் பிரஞ்சிந்திய அரசுக்கு நன்கொடையாக சந்தாசாகிப் வழங்கியுள்ளார். தக்காணத்தில் வாரிசுரிமைப்போர் நடந்ததாம். தக்காணத்தில் ஆசப்ஜா என்ற மன்னன் இறந்துபோன ஆண்டு 1748. அவனுடைய வாரிசுகளான நாசர்ஜங், முசாபர்ஜங் ஆகிய இருவருக்கும் உரிமைப்போர் எழுந்தது. இப்போரினில் பிரஞ்சு ஆளுநரின் தலையீடும் இடம்பெற்றதாம். இவ்வாறு உள்நாட்டார் போர்கள், ஆங்கில, பிரஞ்சுப் போர்களென நாட்டு நடப்புகளை ஆனந்தரங்கர் நெய்தளிக்கக் காணலாம்.

தனிமனிதர் குறிப்புகள் இவை என்பதால் அவருடைய உவகை, கவலை, அல்லல், எதிர்பார்ப்பு என எல்லாக் கூறுகளையும் நாட்குறிப்பு வெளிப்படுத்தும்.

கடிதங்கள், ஒப்பந்தங்கள், தூதுக் குறிப்புகள் போன்றவை நிருவாகம் சார்ந்தவை. அவற்றுக்கப்பால் தன்னைச் சுற்றி நடந்தவற்றைத் தன் கண்ணோட்டத்திலேயே எழுத்துரையாக்குகிறார் ஆனந்தரங்கர். "இந்தப் பட்டணத்தில் உண்டான சனங்களெல்லாருக்கும் நிக்சேபம் அகப்பட்டாப்போலேயும்,  திரவியம் லபித்தாப் போலேயும்... இப்படி பட்டணமெல்லாம் தேவாமிர்தத்தைப் பக்சித்தாலெத்தனை சந்தோசமாயிருப்பார்களோ அத்தனை சந்தோசமாயிருந்தார்கள். இன்றைய சந்தோசத்தைக் காகிதத்திலே எழுதி முடியாது' என்பது ஒரு பதச்சோறு. (தொகுதி-2) புதுவையில் வெல்லமண்டி, நெல்மண்டி போன்றவற்றை நிருவகித்துவந்த ஆனந்தரங்கர், கப்பல் ஒன்றை வாங்கிக் கடல் வணிகமும் மேற்கொண்டவர். திரைகடல் மீது கப்பற்கலம் விட்டுத் திரவியம் தேடிய முதலாவது தமிழராகக் காட்சி தருகின்றார் ஆனந்தரங்கர்.

வேதபுரீசுவரர் ஆலயம் உட்படத் தமிழர்களின் திருக்கோயில்களுக்குத் தொல்லைகள் வரும்போதெல்லாம் ஒரு காப்பரணாகத் தோற்றங்காட்டியவர் அவர். தான்வாழ்ந்த காலத்தின் தமிழை முனைமுறியாமல் தன் நாட்குறிப்பில பதித்துள்ளார். குவர்னர், சோமவாரம், காயிதம், கபுறு போன்றவை ஆங்காங்கே குறிப்பேட்டில் மிளிரும். துக்கம் உறையும் வீடுகளின் முகப்பில் கருப்புத்துணி கட்டுதல், சிறையிலிருக்கும் ஒருவனைத் தப்பிக்கவிட்ட காவலனுக்குத் தூக்குத்தண்டனை தரல், குறிப்பிட்ட இனத்தாரின் மணிவிழாச் சடங்குகள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றில் இரட்டைச் சங்கு ஊத அனுமதித்தல், வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்துக்கொள்ள இசைவு தரல், வலங்கை - இடங்கைப் பிரிவுகளுக்கான குறிப்புகளை உணர்த்துதல் போன்ற பண்பாடு சார்ந்தவற்றையும் நாட்குறிப்பு எடுத்துரைக்கும்.

ஆட்சிப் பொறுப்பில் இல்லாத ஆனந்தரங்கத் தமிழர் மீது பல்வகை இலக்கியங்கள் உருவானதை எண்ணும்போது அவருடைய அருமை பெருமைகள் பளீரிடும்.

"ஆனந்தரங்கச் சம்பு', "ஆனந்தரங்கப்பிள்ளைத்தமிழ்', "ஆனந்தரங்க ராட்சந்தமு' போன்றவை அவர் மீது பாடப்பட்ட பனுவல்கள். ஆனந்தரங்கரைப் பற்றி நூல்கள் எழும்விதத்தில் மொழி, இனம், நாடு இவற்றில் அவராற்றிய பங்களிப்புகள் அழியாத கல்வெட்டுகள். 

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மறத்தமிழரான ஆனந்தரங்கர் பற்றிய இரண்டு குறிப்புகள் கவனிக்கத்தக்கன.
1. தனியொருவரின் தனிப்பட்ட நாட்குறிப்பாக அமைந்தபோதும் புதுவை அரசு, அதனுடைய பெற்றிமையை உணர்ந்து ஆனந்தரங்கரின் நாட்குறிப்பைப்
பன்னிரண்டு தொகுதிகளாக வெளியிட்டு, 

இன்றைக்கும் பொதுமக்கள் வாங்கிப் படிக்க வழிவகை செய்துள்ளது.
2. ஆனந்தரங்கரின் பரம்பரையினர் புதுவையின் மையப் பகுதியில் அமைந்துள்ள (அந்த வீதிக்கே ரங்கப்பிள்ளை வீதி என்பது தான் பெயர்) ஆனந்தரங்கர் வாழ்ந்த இல்லத்தைக் கருக்கழியாமல் அதே வடிவத்துடன் காத்து வருவதுடன் முந்நூறு ஆண்டுகட்கு முன் ஆனந்தரங்கர் தன் இடுப்பில்  செருகியிருந்த வாள் போன்றவற்றையும் காத்து வருகின்றனர்.

 (30-03-2017 - ஆனந்தரங்கரின் 308 ஆம் பிறந்த நாள்) 

-அ.அறிவுநம்பி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com