"விரைவில் தாயாக வேண்டும்'' -சானியா மிர்சா 

இந்தியாவின் வெற்றிகரமான பெண் டென்னிஸ்  வீராங்கனையாக விளங்கும் 30 வயது சானியா மிர்சாவை பொருத்தவரை 2015- ஆம் ஆண்டு விம்பிள்டன்
"விரைவில் தாயாக வேண்டும்'' -சானியா மிர்சா 

இந்தியாவின் வெற்றிகரமான பெண் டென்னிஸ்  வீராங்கனையாக விளங்கும் 30 வயது சானியா மிர்சாவை பொருத்தவரை 2015- ஆம் ஆண்டு விம்பிள்டன் பந்தயத்தில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார். இந்த வெற்றி அவருக்குச் சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. இதற்காக பன்னிரண்டு ஆண்டுகள் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றபோது சந்தித்த பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

டென்னிஸ் போட்டியில் அவர் அணியும் உடை, அவர் வெளியிட்ட தனிப்பட்ட கருத்துகள், நட்புமுறை அனைத்தும் விவாதத்திற்குரியவையாக கருதபட்டன. போதாக் குறைக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட எலும்புமுறிவு.

இவரைப் பற்றி மகேஷ் பூபதி கூறுகையில், "உண்மையில் சானியா மிர்சா ஒரு போராளி. 14 ஆண்டுகளாக நான் அவரை கவனித்து வருகிறேன். கைமுறிவு அறுவை சிகிச்சைக்குப் பின், எவ்வளவு சீக்கிரம் குணமடைந்து மீண்டும் விளையாட வந்து, இரட்டையர் பிரிவில் உலகின் நெ.1 ஆக வெற்றி பெறுவதற்காக அவர் எப்படி கடினமாக உழைத்தார் என்பது பலருக்கு தெரியாது. 2012-ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நான் அவருடன் சேர்ந்து விளையாடி வெற்றி பெற்ற போது கூட ஒரு முஸ்லீம் பெண் எப்படி ஆணுடன் சேர்ந்து விளையாடலாம் என்ற விவாதம் எழுந்தது. அதையெல்லாம் வெற்றிகரமாக சந்தித்து சாதனை படைத்த பெண் அவர்'' என்றார்.

சிறுவயதில் படிக்கும்போது உடனிருந்தவர்கள் ஒவ்வொருவரும் டாக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தபோது, சானியாவின் கனவோ வேறுவிதமாக இருந்தது. அவர்களைப் போன்று தனக்கு கனவுகள் ஏன் தோன்றவில்லை? என்று சானியா நினைத்ததுண்டாம். 

"நல்ல வேளையாக என் பெற்றோர்கள் எனக்கு வழிகாட்டுதலாக அமைந்தார்கள். என்னுடைய டென்னிஸ் கனவுக்கு என் தந்தை இம்ரான் மிர்சாவும், தாய் நசீமாவும் துணையாக நின்றார்கள். என்னுடைய கடினமான உழைப்புக்கும், வெற்றிக்கும் என் தாய் நசீமாதான் இன்ஸ்பிரேஷன்'' என்று  கூறும் சானியாவின் தந்தைக்கு டென்னிஸை விட கிரிக்கெட்டில்தான் ஆர்வம் அதிகமாம்.

"என் மகளுக்கு ஏழு வயதாகும் போதே டென்னிஸ் பயிற்சிபெற அனுப்பி வைத்தேன். மூன்று மாதங்கள் கழித்து பயிற்சியாளர் என்னை அழைத்து, "உன் மகள் எப்படி விளையாடுகிறாள் என்பதை வந்து பார்'   என்று கூறினார்.

ஒருவேளை அவள் சரியாக விளையாட பயிற்சி பெறவில்லையோ என்ற சந்தேகத்துடன் அங்கு சென்றபோதுதான் பயிற்சியாளர் கூறினார். "டென்னில் விளையாட்டில் இப்படி ஒன்றிப் போய் விளையாடுபவர்களை நான் பார்த்ததே இல்லை. பயிற்சியின்போது அவளுக்கு வேறு எதிலும் நாட்டம் செல்வதே இல்லை'  என்றார். இப்போது கூட சானியா யாருடன் சேர்ந்து விளையாடுகிறார் என்பது குறித்து நான் ஏதாவது சொல்வேனா? என்ற எதிர்பார்ப்பு அவளிடம் உள்ளது''  என்றார் இம்ரான் மிர்சா.

பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்குள்ள இடங்களைச் சுற்றி பார்க்கவும், அந்த  ஊர் உணவை ருசி பார்க்கவும் விரும்புவார்கள். சானியாவைப் பொருத்தவரை எந்த நாட்டில் விளையாட சென்றாலும் ஊர் சுற்றி பார்க்க விரும்புவதில்லை. தங்கும் ஓட்டல் அறை, விளையாடும் டென்னிஸ் கோர்ட் எப்படியிருக்கிறது என்பதை முதலில் கவனிப்பாராம். அதுமட்டுமின்றி "போட்டிகளில் பங்கேற்க ஒரே நாட்டிற்கு அடிக்கடி செல்வதால், ஊர் சுற்றி பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதில்லை' என்கிறார் சானியா.

இடையில் போட்டிகள் ஏதும் இல்லாத நேரத்தில் துபாயில் உள்ள தன் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரருமான சொயப்மாலிக்கை போய் பார்ப்பதுண்டு. இருவரும் சந்திக்கும்போது அவரவர் விளையாட்டைப்பற்றி விவாதிப்பதில்லையாம். எப்போதாவது ஒருமுறை கால்பந்து விளையாட்டைப் பார்க்க சேர்ந்து செல்வதோடு சரி. மற்றபடி ஹைதராபாத்தில் தன் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதில் நேரத்தை செலவழிப்பதுண்டாம்.

"தொடர்ந்தாற்போல் போட்டிகளில் பங்கேற்ற பின்னர் நேரம் கிடைக்கும்போது, ஹைதராபாத், மும்பை நகரங்களுக்குச் செல்லும்போது பொது நிகழ்ச்சிகள், பேட்டிகள் என கலந்து கொள்வதுண்டு. போட்டிகளில் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இந்த வரவேற்பு மக்களிடமிருந்து எனக்கு கிடைத்திருக்காது. என்னைப் பொருத்தவரை வெற்றியைக் கொண்டாடவோ, தோல்விக்காக வருத்தப்படவோ எனக்கு நேரம் கிடைப்பதில்லை.

ஹைதராபாத்தில் தங்கும் காலங்களில் காலை 6.30 மணிக்கு எழுந்துவிடுவேன். சிறிது நேர பயிற்சிக்குப் பின் காலை உணவு. பின்னர் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி. இது நான்கு மணிநேரம் நீடிக்கும். அதனால்தான் டென்னிஸ் கோர்ட்டில் புலியாக செயல்படமுடிகிறது. மற்ற நேரங்களில் டிவி பார்ப்பது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு'' என்கிறார் சானியா.

தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் டென்னிஸ் உலகில் விளையாடுவதாக உத்தேசம்?
"நான் என் வயதைப் பற்றி கவலைப்படுவதில்லை. டென்னிஸ் விளையாடுபவர்கள் தங்கள் திறமை, உடல் வலிமை மீது கவனம் செலுத்த வேண்டும். உடல்

தகுதி என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். ஆனால் உடல் ஆரோக்கியம்தான் முக்கியம். உங்கள் எடையை கூட்டுகிறீர்களோ, குறைக்கிறீர்களோ? ஆனால் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். தினமும் அரைமணி நேரம் நடப்பது, ஓடுவது உடலை சம அளவில் வைத்திருக்க உதவும்.

அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் தற்போது நிறைய பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் பெண்களை ஊக்குவிக்க வேண்டுமென்பதற்காகவே ஹைதராபாத்தில் "சானியா மிர்சா டென்னிஸ் அகாடெமி'யைத் தொடங்கியுள்ளேன். தனிப்பட்ட நபர்கள் ஆதரவை விட அரசு ஆதரவும், வழிகாட்டுதலும்தான் முக்கியம். கோச்சிங், ஃபிட்நஸ், நிகழ்ச்சிகளை அமைத்து தருவதோடு தேவையான நிதியுதவியும் அளிக்க வேண்டும்.

டென்னிஸ் துறையில் எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள் ஸ்டெஃபி கிராஃப் மற்றும் ரோஜர் ஃபெடரெர் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்தியப் பெண்களை பொருத்தவரை என்னை முன்னுதாரணமாக கருதுகிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. எனக்கு பரிந்துரை செய்யப்பட்ட "ராஜீவ்காந்தி கேல்ரத்தினா'  விருது கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. 

நான் இதுவரை இன்னும் தாய் ஆகவில்லை. என்னுடைய பயணத்தின்போது நிறைய பெண் டென்னிஸ் வீராங்கனைகளைப் பார்த்தேன். ஓராண்டு காலம் இடைவெளி எடுத்துக் கொண்டு, குழந்தையைப் பெற்றவுடன் திரும்ப வந்து அதே புத்துணர்வுடன் வேகத்துடன் ஆடி வெற்றிப் பெறுகிறார்கள். அவர்களது கணவர் ஆதரவாக உள்ளனர். எனக்கும் விரைவில் தாயாக வேண்டுமென்ற எண்ணம் உள்ளது''  என்கிறார் சானியா.
 - பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com