32 ஆண்டுகளாக சுக்கு காபி!

காலையில் "காபி' பின்  எப்பொழுது வேண்டுமானாலும் "டீ' என்ற பழக்கம் இன்று அதிகமாகி விட்டது.  காபி கடை ஆரம்பித்தவர்
32 ஆண்டுகளாக சுக்கு காபி!

காலையில் "காபி' பின்  எப்பொழுது வேண்டுமானாலும் "டீ' என்ற பழக்கம் இன்று அதிகமாகி விட்டது.  காபி கடை ஆரம்பித்தவர் பின்னர் மெல்ல மெல்ல உழைத்து முன்னேறி சிறிய ஓட்டலை வைப்பது வழக்கம். ஆனால் சுக்கு காபி மட்டுமே 1985-ஆம் ஆண்டு போடத்  துவங்கி இன்று வரை அதைத் தொடர்ந்து வரும் லூயிஸ் சந்தோஷமாக இருக்கிறார். அது மட்டும் அல்ல அதே தள்ளுவண்டி கடையை தொடர்ந்து நடத்திக் கொண்டும் வருகிறார்.

"வீட்டிற்கு  யார் வந்தாலும் நாம் அவர்களுக்கு காபி கொடுத்து உபசரிப்போம் அல்லவா? அதையேதான் நான் ரோட்டோரம் எனது தள்ளு வண்டியில் சுக்கு  காபி கொடுத்து உபசரிக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் ரெட்ஹில்ஸ் வருபவர்கள் எல்லோரும் எனது உபசரிப்பை ஏற்காமல் போனதில்லை. நான் அவர்களை உபசரிக்க வேண்டும் என்றால் அவர்களுக்குப் பிடித்தமான அளவில் அந்த சுக்கு காபி இருக்கவேண்டும் இல்லையா? அதனால் நான் தினமும் அதிகாலை சுமார் 4 மணிக்கு  எழுந்து, இந்த சுக்கு காபிக்கு தேவையானவைகளை ஒன்றாக சேர்த்து சுவையான சுக்கு காபியை தயாரித்து எடுத்துக் கொள்வேன். முன்பெல்லாம் ஒரு பெரிய பானையில் அது  தயாராகி என்னுடன் வரும். பல வருடங்களுக்கு முன்பு ஒரு தள்ளு வண்டியை நானே தயாரித்தேன். இதற்குக் காரணம் காபி சூடாக இருக்க வேண்டும் அல்லவா? வெளியே இருந்து பார்த்தால் நெருப்பு இருப்பது தெரியாது. காலை 8 மணிக்கு கிளம்பினால் மாலை  சுமார் 7  மணிக்குள் எல்லா காபியையும் விற்றுவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்து விடுவேன்.  

வாரம் ஒரு நாள்  ரெட் ஹில்ஸில் இருந்து கிளம்பி  சென்னையில் உள்ள பாரிஸ்  வந்து சுக்கு காபிக்கு தேவையான வெல்லம், சுக்கு, இஞ்சி, தனியா, மிளகு ஆகியவைகளை வாங்கிக் கொண்டு வருவேன். ஒரு காபி ரூபாய் 8 தான். சுமார் 200   -இல் இருந்து 300  கப்  காபி தயாரித்து எடுத்து வருவேன்.  நான் எப்பொழுதும் ஓர் இடத்திற்கு காலை சுமார் 11  மணிக்கு செல்வேன். அங்கு வயதான ஒரு முதியவர் வந்து என்னிடம் காபி வாங்கி குடிப்பார். அங்கே சிறிது நேரம் இருந்து விட்டு வேறு ஓர் இடத்துக்கு மாறுவேன். ஒரு நாள் அந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை. அடுத்த நாள் சென்றபோது அந்த முதியவர் என்னிடம் வந்து நேற்று ஏன் வரவில்லை என்று கேட்டார். நான் காலதாமதமாக கிளம்பியதால் அந்த இடத்திற்கு வர முடியவில்லை என்றேன். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் இருக்கும் இடத்தில் எனக்கு பெரிய வியாபாரம் இல்லை. அதனால் அந்த இடத்திற்கு நான் செல்லவில்லை என்பதே உண்மை. அவர் என்னிடம் வந்து நான் சுமார் மூன்று மணிநேரம் காத்திருந்து பின் சென்றேன் என்று சொன்ன பொது நான் நெகிழ்ந்து விட்டேன்.  அன்றிலிருந்து எப்படியாவது  அந்த இடத்திற்கு செல்லாமல் இருப்பதில்லை. சமீபத்தில் தான் அந்த பெரியவர் இறந்தார் என்று கேள்விப் பட்டு வருந்தினேன். அவருக்காக அன்று ஓரிரு பெரியவர்களுக்கு இலவசமாக சுக்கு காபி கொடுத்தேன்.   

இந்தக் காபியை நானேதான் தயாரிப்பேன். என் மனைவியோ அல்லது என் இரு பிள்ளைகளோ ( ஒரு மகள், ஒரு மகன்) தயாரிக்க விடுவதில்லை. காரணம் எந்த சுவையை எதிர்பார்த்து  மக்கள் வருகிறார்களோ அதே சுவையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பம்தான். இப்பொழுதெல்லாம் சுக்கு காபி
யுடன் சுண்டலையும் விற்கிறேன். இதையெல்லாம் நான் மிகவும் கவனத்துடன், சுத்தமாக செய்கிறேன். மக்கள் வயிற்றுடன் நான் விளையாடுவதே இல்லை.

என்மனைவி விஜயா கூட உழைத்தது போதும் என்று சில வருடங்களாக கூறிவருகிறார். ஆனால் நான் தொடர்ந்து விடாமல் இந்தத் தொழிலைச் செய்வது எனக்கு மன நிறைவை தருகிறது.  சுக்கு காபியே சுவை என்று வருவோரை நான் ஏமாற்றுவதாக இல்லை', என்றார் சுக்கு காபி புகழ் லூயிஸ். 

இவருக்கு சிறுவயதில் இருந்தே காது கேட்காது. சிறு வயதில் ஒருமுறை காதில் கட்டி வந்து அது சரியாக கவனிக்கப் படாததால் காது கேட்காமல் போய்விட்டது. ஆனாலும் தொப்பி, கோட்டுடன் இவர் வருவது "சுக்கு காபி நடை' என்று கூறலாம்.
 -சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com