ஒன்ஸ் மோர்

"நீங்கள் படுக்கையை விட்டு எழும்போது என்ன மனநிலையில் இருக்கிறீர்களோ அதுதான் நாள் முழுக்கத் தொடர்கிறது.'
ஒன்ஸ் மோர்

"நீங்கள் படுக்கையை விட்டு எழும்போது என்ன மனநிலையில் இருக்கிறீர்களோ அதுதான் நாள் முழுக்கத் தொடர்கிறது.' உங்களுடைய நாளின் ஆரம்பம் விழிப்பதில் இருந்து எப்படி தொடங்குகிறீர்களோ அப்படித்தான் வீட்டிலும், வெளியிலும் உங்களுடைய வேலை அமைகிறது.

ஆக, எழுந்திருக்கும்போது சீரான மனநிலை அவசியம். அன்று செய்யப்போகிற வேலை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இனிமையான வேலை என்று எண்ணமிடுங்கள். அந்த எண்ணம் நாள் முழுவதும் உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வேலைக்குத் தேவையான சக்தியையும் வழங்கும்.

"எல்ஸா மாக்ஸ்வெல்' ஒரு பத்திரிகையாளர். "எனக்கு படுக்கையை விட்டு எழுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ராத்திரி எத்தனை தாமதமாகப் படுக்கச் சென்றாலும், கிறிஸ்துமஸ் நாளை எதிர்பார்க்கிற குழந்தையின் ஆர்வத்தோடு ஒவ்வொரு காலைப் பொழுதையும் வரவேற்கிறேன்'  என்றார் அவர்.

காலை 6 மணிக்கே ஆபீசுக்குச் சென்று விடுகிற ஆசாமியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அலுவலக நேரம் பத்து மணி என்றால் ஒரு அரைமணி தாமதமாகச் செல்வதையே வழக்கமாக்கிக் கொண்டவர்கள் நம்மவர்கள். இங்குள்ள உயர் அதிகாரிகள் இதனைத்தான் பெருமையாகக் கருதுகிறார்கள்.

அமெரிக்கப் பதிப்பாளர் ஒருவர், நிறைய  செய்தித்தாள்களும், புத்தகங்களும் வெளியிடுகிறவர். ராண்டம் ஹவுஸ் பப்ளிகேஷன் என்றால் உங்களுக்குத் தெரியும். அந்த ஆளை "மீடியா கிங்' என்று அமெரிக்கா போற்றும். அவருடைய பெயரைச் சொல்லாவிட்டால் எப்படி! எஸ்.ஐ. நியூ ஹவுஸ் என்பதே அவர் பெயர்.

அதிகாலையில் எழுந்து, சரியாக  6 மணிக்கெல்லாம் தம்முடைய ஆபீசில் ஆஜராகி விடுகிறார். தம்முடைய மற்ற எடிட்டர்கள் வருவதற்கு முன்பே அன்றைய முக்கிய வேலைகள் என்னென்ன என்று ஆராய்கிறார். விளம்பரம், விநியோகம் மூலம் வந்து குவியும் டாலர் எண்ணிக்கைகளைப் பரிசோதிக்கிறார்.

இந்த நியூ ஹவுஸையே தூக்கிச் சாப்பிட்டு விடுகிற ஆசாமியும் அதே அமெரிக்காவில் இருந்தார். அவர் பெயர் ஸாம் வால்ட்டன்! பிரபல செயின் - ஸ்டோரான "வால்-மார்ட்' நிறுவன உரிமையாளர். விடியற்காலை 4 மணிக்கே தமது நிறுவனத்துக்குச் சொந்தமான பண்டகசாலை (ரஹழ்ங் ட்ர்ன்ள்ங்)க்குப் போய்விடுவார்.

அங்குள்ள காப்பாளர்களை அழைத்து இருப்பு நிலவரங்களை விசாரித்தறிவார். தினம் 16 மணி நேரம் வேலை பார்க்கிறவர் அமெரிக்காவிலேயே அதிக சொத்துக்காரராக இருப்பதில் ஆச்சரியம் என்ன!

 "உங்களுடைய நாளை நீட்டித்துக் கொள்ள விரும்பினால் இரவிடமிருந்து சில மணி நேரங்களை அபகரித்து விடுங்கள்'. நியூயார்க் பக்கமாய் உள்ள ஒரு "க்ளப்'பில் இப்படியான "ஙர்ற்ற்ர்' வைத்திருந்தார்கள்.

நல்ல யோசனை. இதனைப் பலவிதமாய் பின்பற்ற முடியும். வில்லியம் ஜெ.லெடரர் என்றொரு எழுத்தாளர். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 8 மணி வரை எழுதுவாராம். அந்த நேரத்தில் டீ குடித்துவிட்டு ஷவரிலும் குளித்து ஃப்ரெஷ்ஷாகி விடுவாராம். மனிதர் அந்தக் "க்ளப்' வாசகத்தைப் படித்திருப்பாரோ என்னவோ!

சிலர் தங்களை சகலகலா வல்லவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். சற்று ஊடுருவினால் "நுனிப்புல் மேய்பவர்' என்பது தெரிய வரும். பேச்சில்தான் என்றில்லை, காரியத்திலும் அநேகர் அப்படித்தான்.

வான்மதி ஆங்கில இலக்கியம் படித்தாள். கல்லூரி ஆசிரியையாக கொஞ்சநாள் வேலை பார்த்தாள். "இதுகளைக் கட்டிக்கொண்டு நம்மால் பராமரிக்க முடியாது' என்று வெளியில் வந்தாள். சட்டம் படித்தாள். கோர்ட்டிலும் குப்பை கொட்ட முடியாமல் "குட் பை' சொன்னாள். எழுத்துலகை ஒரு கலக்கு கலக்கி விடுகிறேன் என்று எழுத உட்கார்ந்தாள். அதற்குள் யாரோ அழைக்க அரசியல் மேடை ஏறினாள். அதுவும் செட் ஆகவில்லை. இப்படி எதுவுமே சரிப்படாமல் கடைசியில் கல்யாணம் பண்ணிக்கொண்டு பிள்ளைகளுடன் மல்லுக்கு நிற்கிறாள்!

வான்மதியைப்போல் எத்தனையோ பேர் எதிலும் காலூன்ற முடியாமல் காலத்தை வீணடித்து விடுகிறார்கள். எந்தக் காரியத்தில் இறங்கினாலும் ஒரு தீவிரமும், ஈடுபாடும் தேவை. அப்போதுதான் அதை முழுமையாகச் செய்ய முடியும்.
"நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்' என்ற நூலில் ஜே.எஸ்.ஏப்ரகாம்.
தொகுப்பு: கேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com